மலேரியா தடுப்பூசியை உருவாக்க பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜிஎஸ்கே 30 ஆண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்தத் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி, ஒவ்வோர் ஆண்டும் 6,00,000 பேர் ஆப்பிரிக்காவில் மலேரியாவால் உயிரிழக்கின்றனர். அதில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு 80% உள்ளது.
2021-ம் ஆண்டில், உலகளவில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95% மற்றும் மலேரியா பாதித்து உயிரிழந்தவர்களில் 96% ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
இதைத் தடுக்கும் வகையில் மலேரியாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில் உள்ள சுகாதார நிலையத்தில் டேனியலா என்ற பெண் குழந்தைக்கு முதல் மலேரியா தடுப்பூசி வழங்கப்பட்டது. கேமரூனில், ஆறு மாதத்துக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாக மலேரியா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
மொத்தம் நான்கு தவணைகளாக இந்தத் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு பிற தடுப்பூசிகளுடன் சேர்த்து இதுவும் வழங்கப்படும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திட்டம் தொடங்குவதற்கு முன்பாக கென்யா, கானா மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் மாதிரித் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. அதில் தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தைகள் மலேரியா பாதித்து இறக்கும் எண்ணிக்கை குறைந்தது தெரியவந்தது.
இந்தத் தடுப்பூசியானது மூன்றில் ஓர் உயிரைக் காப்பாற்றக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தில் கொசு வலைகள் மற்றும் மலேரியா மாத்திரைகளுடன் தடுப்பூசியும் முக்கியமான கூடுதல் கருவியாகப் பயன்படும் என்று நம்பப்படுகிறது.
இந்த மூன்றையும் ஒன்றாகப் பயன்படுத்தும்போது குழந்தைகளுக்கு மலேரியாவிலிருந்து 90% பாதுகாப்பை அளிக்கும் என்று மற்றோர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மலேரியா தடுப்பூசியை உருவாக்க பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜிஎஸ்கே 30 ஆண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்தத் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனமும் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
கொசுக்களால் பரவும் நோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஒரு வரலாற்றுத் தருணம் இது என்று கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் எத்தனை லட்சம் தெரியுமா?
வேலைவாய்ப்பு : மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பணி!
தேசிய நெடுஞ்சாலையில் சாலை வசதி கோரி மலை கிராம மக்கள் மறியல்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!