டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடா கடந்த அக்டோபர் 9ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு, டாடாவை பற்றிய பல இனிமையான தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய பணக்காரர் இப்படி எளிமையாக வாழ்ந்து மறைந்துள்ளாரே என்று கருதுமளவுக்கு அவரின் வாழ்க்கை அமைந்துள்ளது.
ரத்தன் டாடா பற்றி அமிதாப்பச்சன் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் சில தகவல்களை கூறியுள்ளார். அதில், தான் ஒரு முறை ஒரே விமானத்தில் ரத்தன் டாடாவுடன் லண்டன் சென்றேன். ஹீத்ரூ விமான நிலையத்தில் என்னுடன் பேசிக் கொண்டே அவர் வெளியே வந்து விட்டார். திரும்பி பார்த்தால் அவருடைய உதவியாளர்களை யாரையும் காணவில்லை. அவர்களுக்கு போன் செய்ய பூத்துக்கு சென்றார்.
அங்கே , அவரின் பையில் பணமும் இல்லை. உடனே என்னிடம் திரும்பி வந்த ரத்தன் டாடா, அமிதாப் கொஞ்சம் பணம் எனக்கு கொடுத்து உதவ முடியுமா? என்று கேட்டார். டாடாவின் எளிமையை பார்த்து எனக்கு ஒரே ஆச்சரியமாகிப் போனது என்று கூறியுள்ளார்.
மற்றொரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ரத்தன் டாடா , அமிதாப்பின் நண்பர் ஒருவரிடத்தில் தன்னை காரில் வீட்டில் விட்டு விட முடியுமா? உங்கள் வீட்டுக்கு பின்புறம்தான் எனது வீடும் உள்ளது. என்னிடத்தில் இப்போது கார் இல்லை என்று கேட்டுள்ளார். இதையெல்லாம் தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் அமிதாப் ரத்தன் டாடா பற்றி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ரத்தன் டாடாவின் டாடா புரோடக்ஷன் கம்பெனியான டாடா இன்போமீடியா படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு அமிதாப் நடிப்பில் வெளி வந்த ஏத்பார் படத்தையும் தயாரித்தது. இந்த படத்தால் கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் டாடா நிறுவனம் நஷ்டத்தை சந்தித்ததாக சொல்லப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தீபாவளி போனஸ் : வலியுறுத்திய எடப்பாடி… நிறைவேற்றிய ஸ்டாலின்
இதற்காகத்தான் மும்பையில் குடியேறினேன் : நடிகர் சூர்யா அளிக்கும் விளக்கம்!