கடந்த ஜனவரி 4 ஆம் தேதி கொச்சியிலுள்ள டல்க் டல்க் ஹோட்டலில் இருந்து கொச்சி போர்ட் பகுதி ஆட்டோ ஓட்டுநரான சித்திக் ஹூசைனுக்கு போன் அழைப்பு வந்துள்ளது. ஆட்டோவில் ஒரு விவிஐபி பயணித்து நகரை சுற்றி பார்க்க ஆசைப்படுகிறார். அதற்காக, 4 ஆட்டோக்கள் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதையடுத்து, சித்திக் தனது ஆட்டோவுடன் மேலும் 3 ஆட்டோக்களுடன் அந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
பின்னர், ஆட்டோக்கள் முற்றிலும் சோதனையிடப்பட்டுள்ளன. இதை பார்த்ததும் சித்திக்கிற்கு யார் அந்த விவிஐபி என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கொஞ்ச நேரத்தில் சாதாரண சட்டை போட்டுக்கொண்டு ஒருவர் வந்துள்ளார். அவரை சித்திக்கிடத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இவர்தான் விக்டர் ஆர்பின். ஹங்கேரி நாட்டு பிரதமர் என்று அறிமுகப்படுத்தினர். இத்தனை எளிமையா? என்று அவரை பார்த்து சித்திக் ஆச்சரியப்பட்டு போனார். தொடர்ந்து, ஹங்கேரி பிரதமரும் அவரின் இரு மகள்களும் சித்திக்கின் ஆட்டோவில் ஏறி பயணித்துள்ளனர். பாதுகாவலர்கள் மற்ற ஆட்டோக்களில் பின் சென்றுள்ளனர்.
ஹங்கேரி பிரதமருடன் தனது அனுபவத்தை சித்திக் பகிர்ந்து கொண்டதாவது, ‘ எனது ஆட்டோவில் ஏறிக் கொண்ட ஹங்கேரி நாட்டு பிரதமர் ஆட்டோவை ஓட்டி பார்க்க ஆசைப்பட்டார். ஆனால், அது சட்டத்தை மீறிய செயல் என்பதால் அவரிடத்தில் விளக்கி கூறினேன். பின்னர், டிரைவர் சீட்டில் அமர வைத்து சும்மா ஹேண்ட்பாரை பிடித்து இருக்கும்படி மட்டும் செய்தேன்.
மட்டஞ்சேரியிலுள்ள டச் அரண்மனை, சாந்தாக்ருஸ் கதீட்ரல் ஆலயம், யூதர்கள் தெரு போன்றவற்றை அவருக்கு சுற்றி காண்பித்தேன். மதியம் லஞ்ச் சாப்பிட ஹோட்டலுக்கு சென்றார்கள். அப்போது, ஹங்கேரி பிரதமர் எங்களையும் கட்டாயப்படுத்தி உணவருந்த செய்தார். அவருக்கு பக்கத்து டேபிளில் இருந்து நாங்கள் சாப்பிட்டோம். கடந்த 28 வருடங்களான ஆட்டோ ஓட்டி வருகிறேன். இந்த வாழ்க்கையில் ஹங்கேரி பிரதமர் என் ஆட்டோவில் பயணித்தது நல்ல நினைவாக அமைந்தது’ என்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
’மின்னல் வேக அமைச்சர்’ : பாராட்டி தள்ளிய அதிமுக எம்.எல்.ஏ… வியந்த சட்டமன்றம்
பாட பயந்து ஸ்டூடியோவில் இருந்து தப்பிய ஜெயச்சந்திரன்: பிடித்து வந்து பாட வைத்த தயாரிப்பாளர்!