வாட்ஸ்அப் பே பயனர் வரம்பை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நீக்கியுள்ளது.
வளர்ந்து வரும் நவீன உலகில் தற்போது டீ கடை, பூ கடைகளில் கூட யுபிஐ பணப்பரிவர்த்தனை தான் செய்யப்படுகிறது. போன் பே, ஜி பே, பேடிஎம் என பல்வேறு யுபிஐ தளங்கள் உள்ளன.
இந்நிலையில் 500 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பும் 2020ல் டிஜிட்டல் பேமெண்ட் முறையை அறிமுகப்படுத்தியது.
ஆனால் இதற்கு அனுமதி அளிக்கும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) முதலில் 30 சதவிகித பயனர்களுக்கு மட்டுமே இந்த சேவையை வழங்க வேண்டும் என்று வரம்பை நிர்ணயித்தது.
2022ஆம் ஆண்டு அதன் வரம்பானது 100 மில்லியனாக உயர்த்தப்பட்டது.
இந்தநிலையில் அனைத்து பயனர்களும் வாட்ஸ்அப் பேவை பயன்படுத்தும் வகையில் வரம்புகள் நீக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே உள்ள அனைத்து UPI வழிகாட்டுதல்கள் மற்றும் TPAP விதிமுறைகளுக்கு வாட்ஸ் அப் பே தொடர்ந்து இணங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே யுபிஐ பரிவர்த்தனைகளில் போன் பே, ஜி பே ஆகியவை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. போன் பே 48சதவிகித சேவையையும், ஜி பே 37சதவிகித சேவையையும் கொண்டுள்ளன. இவ்விரண்டு ஆப்களும் ஒரு மாதத்தில் 13.1 பில்லியன் பரிவர்த்தனைகளை செயல்படுத்துவதாக தரவுகள் கூறுகின்றன.
தற்போது இவற்றுக்கு போட்டியாக வாட்ஸ் அப் உருவெடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா