40 நாட்களில் ஒரு லட்சம் பேர் பணி நீக்கம்: இந்தியாவின் நிலை என்ன?

இந்தியா

பணி நீக்கம்… பணி நீக்கம்… சமீப மாதங்களாக நாம் அதிகம் கேட்கும் வார்த்தை இதுதான். 

இந்தியா மட்டுமல்ல உலகளவில் ஐடி துறை என்பது இளைஞர்கள் விரும்பும் துறையாக இருந்து வந்தது. ஆனால் கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகு கொத்து கொத்தாக ஊழியர்களை சில நிறுவனங்கள் தூக்குவதால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை இழக்கின்றனர் என்பதோடு அந்த துறை மீதான ஆசையும் இளைஞர்கள் மத்தியில் குறைந்து வருகிறது. 

காரணம் 2023 தொடக்கத்திலிருந்து அதாவது ஜனவரி 1 முதல் பிப்ரவரி 10 வரை இந்த 40 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேர் லே ஆஃப் எனப்படும் பணி நீக்கத்தால் வேலை இழந்துள்ளனர். 

இந்த ஆண்டில் மட்டும் 334 டெக் நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையில் இறங்கியது. தற்போது வரை உலகளவில் கிட்டத்தட்ட 1,01,617 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்களைக் கண்காணித்து வரும் இணையதளமான Layoffs.fyi குறிப்பிட்டுள்ளது. 

இந்த 1,01,617 பணி நீக்கங்களில் 35,000 நீக்கங்கள் இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனங்களால் செய்யப்பட்டுள்ளன.

2022 முதல் உலகளவில் 1,044 தொழில்நுட்ப நிறுவனங்கள் கிட்டத்தட்ட 1,59,786 பேரை வேலையை விட்டு தூக்கியுள்ளதாக இந்த தரவுகள் காட்டுகின்றன. 

What is the status of layoffs in India

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கிட்ஹப் தனது ஊழியர்களில் 10 சதவிகிதத்தினரை (3 ஆயிரத்துக்கும் அதிகம்) நீக்கியிருக்கிறது. டெக் ஜெயிண்ட் எனப்படும் யாஹூ நிறுவனம் 20 சதவிகிதம், அதாவது 1,600 ஊழியர்களை நீக்கியுள்ளது. 

இதுதவிர இந்த ஆண்டில், டிஸ்னி நிறுவனம் தனது ஸ்ட்ரீமிங் சேவை சந்தாதாரர்களின் சரிவு காரணமாக 7,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. 

கூகுள் 12,000 பேரையும், அமேசான் 18,000 பேரையும், மைக்ரோசாப்ட் 10,000 பேரையும், டெல் 6,650 பேரையும், ஜூம் 1,300 பேரையும், ஐரோப்பிய பன்னாட்டு மென்பொருள் நிறுவனமான எஸ்ஏபி 3,000 பேரையும், இளைஞர்களின் ட்ரீம் கம்பெனியான ஐபிஎம் 3,900 பேரையும் நீக்கியுள்ளது. 

பேரிடர் சமயத்தில் டிஜிட்டல்மயம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உந்துதலால் நிறுவனங்கள் பணியமர்த்துதலில் ஈடுபட்டன. ஆனால் பேரிடருக்கு பிறகு அதாவது 2022 பிற்பகுதியில் நிறுவனங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கத் தொடங்கின என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். 

இந்த பணி நீக்கத்துக்கு கொரோனா காலத்திற்கு பிறகான பொருளாதார மந்த நிலையும் முக்கிய காரணியாக இருக்கிறது.

பணி நீக்க அறிவிப்பின் போது மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா எழுதியுள்ள கடிதத்தில், “குறிப்பிடத்தக்க மாற்றங்களின் காலங்களில் வாழ்கிறோம். வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளை நான் சந்திக்கும் போது, சில விஷயங்கள் தெளிவாக புரிந்தது. 

தொற்றுநோய் காலக்கட்டத்தின் போது வாடிக்கையாளர்கள் தங்கள் டிஜிட்டல் செலவினங்களை அதிகப்படுத்தியதை கண்டோம், தற்போது அது குறைந்துள்ளது. 

நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு தேவையான முடிவுகளை, முயற்சிகளை எடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். இது கடினமான முடிவுதான்.

உலகின் சில பகுதிகள் மந்தநிலையில் இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் உள்ள நிறுவனங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியிருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார். 

எனினும் இந்த பணிநீக்கம் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அத்துறை சார்ந்த வல்லுநர்கள் கணிக்கின்றனர். இந்தியாவில் ஐடி நிறுவனங்கள் இயங்குவதற்கான செலவும், ஊதியங்களும் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளை விட குறைவு என்பதால் இந்தியாவில் பணிநீக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பது அவர்களின் கருத்து.

அதேபோல 5ஜி சேவைகள் மெல்ல அதிகரித்து வருவதால் ஜூன் மாதத்திற்கு பிறகு ஐடி துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகக்கூடும் என்றும் அத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

பிரியா

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: சோயா கீமா பராத்தா!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *