இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18 தொடங்கப்படுமா? அல்லது 19 தொடங்கப்படுமா என்ற குழப்பங்கள் அதிகரித்திருந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 19ல் தொடங்கி 28ல் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் முக்கியப் பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. இந்து கடவுளாக நம்பப்படும் சிவனின் மனைவி பார்வதிக்கு பிறந்த மகன் விநாயகர். அவரது பிறந்தநாளைக் கொண்டாட உருவாக்கப்பட்டதுதான் இந்த விநாயகர் சதுர்த்தி.
விநாயகர் பிறப்பிற்கும் அவருக்கு யானைத் தலை வந்ததற்கும் பல கதைகள் கூறப்பட்டாலும் இந்தியாவில், குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில், எந்த விஷயங்களை புதிதாகத் தொடங்கினாலும் அங்கு பிள்ளையாரை வைத்து வழிபடும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. தடைகளை நீக்குபவர், ஞானம் மற்றும் புத்திசாலித்தனத்தின் கடவுள் என்று போற்றப்படுகிறார் விநாயகர்.
விநாயகர் சதுர்த்தி தேதி?
வருடந்தோறும் செப்டம்பர் மாதம் கொண்டாடப்படும் இப்பண்டிகை தொடங்கியவுடன் மக்களின் வீடுகளில் தனிப்பட்ட முறையிலும், விரிவான பந்தல்களிலும் களிமண்ணாலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு 10 நாட்கள் ஆராதனை செலுத்தப்படுகிறது. விநாயகருக்கு விருப்பமான இனிப்பு வகைகளான மோதகம், கொழுக்கட்டை போன்ற பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். பத்தாம் நாள் சிலை வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி பொதுவாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொண்டாடப்படும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18 தொடங்குமா அல்லது 19 அன்று தொடங்குமா என்று குழப்பங்கள் அதிகரித்திருந்தது.
ஆனால் த்ரிக் பஞ்சாங்கத்தின்படி சதுர்த்தி திதியில் விநாயகரை வீட்டிற்கு வரவேற்கும் நல்ல நேரம் செப்டம்பர் 18, 2023 அன்று மதியம் 12:39 மணிக்குத் தொடங்கி, செப்டம்பர் 19, 2023 அன்று மதியம் 01:43 மணிக்கு முடிவடைகிறது. பத்து நாட்கள் நடைபெறும் விநாயகர் உற்சவ விழா செப்டம்பர் 28ம் தேதி விநாயகர் தரிசனத்துடன் நிறைவடையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகவே செப்டம்பர் 19, 2023 அன்று, விநாயக சதுர்த்தி கொண்டாடப்படும். மேலும் செப்டம்பர் 28, 2023 அன்று, பத்தாம் நாள், விநாயகரை ஆற்றில் கரைக்கும் நிகழ்வு நடைபெறும்.
விதை விநாயகர்
இதனிடையே விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதற்கான வழிமுறைகளையும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விநாயகர் சிலையை செய்வதற்கான வழிமுறைகளையும் அரசு வெளியிட்டிருந்தது.
இதனிடையே இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிற்பக் கலைஞர் வேல்முருகன் களிமண்ணால் விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 40 ஆண்டுகளாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு களிமண்ணால் விநாயகர் சிலை செய்து வரும் வேல்முருகன் விநாயகர் சிலைகளை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
இவர் சுப நிகழ்ச்சிகளுக்கு விநாயகர் சிலைகளை செய்து வருகிறார். ஆனால் இந்த ஆண்டு வெறும் சிலைகளை மட்டும் செய்யாமல் கூடுதலாக விநாயகர் சிலையில் விதைகளை சேர்த்து செய்துள்ளார். இதன் மூலம் சிலைகளை தண்ணீரில் கரைக்கும் போது விதைகள் செடிகளாக வளரும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து நியூஸ் 18 ஆங்கில தொலைக்காட்சிக்கு வேல்முருகன் அளித்த பேட்டியில், “இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்காக, விதை விநாயகர் சிலைகளை தயாரித்துள்ளேன். அரை அடி மற்றும் ஒரு அடி அளவில் இந்த சிலைகளுக்குள் மரத்தின் விதைகள் மற்றும் நெற்பயிர்களை வைத்துள்ளேன்.
இதற்காக தாமிரபரணி ஆற்றின் சமவெளியில் இருந்து களிமண்ணை சேகரித்து வந்து அதிலுள்ள கற்களை அகற்றி, பதப்படுத்தி சிலைகளை உருவாக்கியுள்ளேன்.
ரசாயன கலவை இல்லாத நிறங்களை தான் சிலைகளுக்கு பயன்படுத்தியுள்ளேன்” என்று தெரிவித்தார்.
இவரிடம் அரை அடி சிலை ரூ.100-க்கும், ஒரு அடி சிலை ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா, சண்முகப்பிரியா
பரவும் டெங்கு… சென்னை குடிநீர் தரம் என்ன? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!
உலகக்கோப்பை: எச்சரிக்கும் தென்னாப்பிரிக்கா… பின்வாங்கும் ஆஸ்திரேலியா…