மணிப்பூர் டிஜிபி என்ன செய்து கொண்டிருக்கிறார்?: நேரில் ஆஜராக உத்தரவு!

Published On:

| By Kavi

What is Manipur DGP doing

மணிப்பூர் வழக்கில் அம்மாநில டிஜிபி நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 1) உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் இன்று (ஆகஸ்ட் 01) இரண்டாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா வழக்கை விசாரித்தனர்.

மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “இதுவரை 6,532 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 11 வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடையவை ஆகும்” என்று தெரிவித்தார்.

அப்போது தலைமை நீதிபதி,  “இந்த 6,532 எப்.ஐ.ஆர்.களில் ஜீரோ எப்.ஐ.ஆர் எத்தனை? இவை எந்தெந்த தேதிகளில் ரெகுலர் எப்.ஐ.ஆர்.ஆக மாற்றப்பட்டுள்ளது” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு, “6,532 எப்.ஐ.ஆர்.களின் சார்ட் அதிகாரிகளால் ஒரே இரவில் தயாரிக்கப்பட்டு, அதுகுறித்து காலையில் தனக்கு விளக்கமளிக்கப்பட்டதால் இன்றைய தினம் என்னால் பதிலளிக்க முடியவில்லை” என்று பதிலளித்தார்.

பாலியல் வன்கொடுமை வீடியோ தொடர்பான வழக்கில் கைது விவரங்கள் குறித்து தலைமை நீதிபதி கேள்வி எழுப்ப, அதற்கு உரிய பதிலை வழங்காத துஷார் மேத்தா, “இந்த வீடியோ வெளியாகி பரவிய பிறகு அதில் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன” என்று கூறினார்.

இதையடுத்து சொலிசிட்டர் ஜெனரல் சமர்ப்பித்த அறிக்கையை படித்து பார்த்த பிறகு, “ஒரே ஒரு விஷயம் மட்டும் மிக தெளிவாக தெரிகிறது. எப்.ஐ.ஆர்.கள் தாமதமாகத் தான் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மே 4ஆம் தேதி நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக ஜூலை 7ஆம் தேதி தான் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் காரிலிருந்து வெளியே இழுத்து வீசப்பட்டுள்ளார். அவரது மகன் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தீவிரமான சம்பவத்தில் தாமதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி இத்தனை எப்.ஐ.ஆர்.களில் ஓரிருவரைத் தவிர வேறு யாரும் கைது செய்யப்படவில்லை” என்று கடும் அதிருப்தி தெரிவித்தார் தலைமை நீதிபதி,

மேலும், “விசாரணை மிக மிக மந்தமாக இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு பிறகு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கைது நடவடிக்கை இல்லை. நீண்ட கால இடைவெளிக்கு பிறகு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன” என்று கண்டனம் தெரிவித்தார்.

இதற்கு துஷார் மேத்தா, “மணிப்பூரில் கள நிலவரம் மோசமாக இருப்பதாகவும், மத்திய அரசுக்கு தெரியவந்த உடனேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “நீங்கள் சொல்வதை கேட்டால் மே மாதம் முதல் ஜூலை இறுதி வரை மணிப்பூரில் சட்டமே இல்லாதது போல் தோன்றுகிறது. எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்ய முடியாத அளவுக்கு அரசு இயந்திரம் பழுதடைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.

மாநில காவல்துறை விசாரணை செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. மணிப்பூரில் சட்டம் ஒழுங்கே கிடையாது. 6000 எப்.ஐ.ஆர்.களில் 7 பேரை மட்டும் தான் கைது செய்திருக்கிறீர்கள் என்று சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது” என்று காட்டமாக தெரிவித்தார்.

இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “7 பேர் வைரல் வீடியோ தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர 250 பேரும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12,000 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

இதையடுத்து தலைமை நீதிபதி, “பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களை போலீசார் தான் வன்முறை கும்பலிடம் ஒப்படைத்தார்கள் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். அந்த போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டதா? டிஜிபி விசாரணை செய்தாரா?. அவர் என்னதான் செய்துகொண்டிருக்கிறார். விசாரணை நடத்துவது அவருடைய கடமை தானே? இரண்டு மாதங்களாக மணிப்பூர் போலீசார் செயலற்றவர்களாக இருந்திருக்கின்றனர்” என்றார்.

சிபிஐ விசாரணை தொடர்பாக கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, “அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றுவது சாத்தியமில்லாத ஒன்று. இந்த 6500 எஃப்ஐஆர்களை இரண்டாகப் பிரிக்க ஒரு வழிமுறையை வகுக்க வேண்டும் . ஏனெனில் சிபிஐக்கு 6500 வழக்குகளையும் மாற்றி சுமை கொடுக்க முடியாது, இது மத்திய விசாரணை அமைப்புக்கு செயலிழப்பை ஏற்படுத்தும்” என்ற கூற,

“தற்போது பாலியல் வன்கொடுமை தொடர்பான 11 வழக்குகள் மட்டுமே சிபிஐக்கு மாற்றப்படுகிறது” என்று தெரிவித்தார் துஷார் மேத்தா.

குற்றங்களின் தன்மையின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர்.களை பிரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறிய போது,  “இந்த 4ஆம் தேதி வரை அவகாசம் வேண்டும்” என்று துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார்.

What is Manipur DGP doing
மணிப்பூர் டிஜிபி ராஜீவ் சிங்

இதை விசாரித்த நீதிபதிகள், “கொலை, வன்கொடுமை, சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், தீ வைப்பு, வழிப்பாட்டுத் தளங்கள் சேதம் என எப்.ஐ.ஆர்.களை பிரித்து தெரிவிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டனர்.

1. குற்றம் நடந்த தேதி
2.ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட தேதி
3.ரெகுலர் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட தேதி
4.சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட தேதி
5.’164’ வாக்குமூலங்கள் பெறப்பட்ட தேதி
6. கைது செய்யப்பட்ட தேதி என தேதி வாரியாக குற்றம் தொடர்பான அறிக்கைகளை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

“மணிப்பூரில் நிலைமையை ஆராய்ந்து மதிப்பீடு செய்தல், வீடுகளை சீரமைத்தல், அறிக்கைகளை பதிவு செய்தல் என விசாரணை சரியான முறையில் செல்வதை உறுதி செய்ய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட குழுவை அமைப்பது தொடர்பாக நீதிமன்றம் யோசித்து வருகிறது.

அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற முடியாது. மாநில காவல் துறையும் செயல்படாத நிலையில் இருக்கிறது. எனவே சுதந்திரமான அமைப்பு அமைக்கப்பட வேண்டும்.

இறுதியாக மீண்டும் சொல்கிறேன். இங்கு யார் குற்றம் செய்தார்கள் என்பதையெல்லாம் பார்க்க முடியாது. யார் செய்திருந்தாலும் குற்றம் குற்றம்தான்” என்று குறிப்பிட்டார் தலைமை நீதிபதி.

இந்த வழக்கில் மணிப்பூர் டிஜிபி ஆகஸ்ட் 7ஆம் தேதி 2 மணிக்கு நேரில் ஆஜராக உத்தவிட்ட நீதிபதிகள் வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்தனர்.

பிரியா

ஸ்டாலின் உத்தரவு: அன்புமணி மீது கொலை முயற்சி வழக்கு!

அழகர் கோவில் ஆடித்தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel