ஆந்திராவில் வெங்காய வெடி வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி பலியானார். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் எலுரு பகுதியில் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இளைஞர்கள் வெடிகள் வைப்பதில் ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில், அங்குள்ள தெருவில் சிலர் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, பைக்கில் இருவர் வந்தனர். இவர்கள் பைக்கில் வெங்காய வெடி வாங்கிக் கொண்டு வந்துள்ளனர்.
கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்தவர்களை பைக் கடந்த போது, பைக்கில் இருந்த வெங்காய வெடி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் பைக்கை ஓட்டி சென்ற சுதாகர் என்ற இளைஞர் உடல் சிதறி பலியானார். பைக்கில் பின்னால் இருந்தவர் உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், இருவர் உயிருக்கு ஆபத்தான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடி விபத்து தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.
போலீசார் விசாரணையில் தெருவில் இருந்த பள்ளத்தில் பைக் ஏறி இறங்கிய போது, வெங்காய வெடிகள் ஒன்றுடன் ஒன்று உரசி வெடி விபத்து நடந்தது தெரிய வந்தது. ஆந்திராவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இளைஞர்கள் இது போன்ற ஆபத்தான வெங்காய வெடியை வெடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இது டெட்டனேட்டர் அளவுக்கு சக்தி மிகுந்தது. அதிக சத்தத்துடன் வெடிக்கும் தன்மை கொண்டது. அதிகாரிகள் பல முறை எச்சரித்தும் இந்த வெங்காய வெடிகள் சந்தையில் கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர் கொலை!
’நவம்பர் 1ல் தான் தமிழ்நாடு தினம் கொண்டாட வேண்டும்’ : சீமான், வேல்முருகன் அறிக்கை!