பிப்ரவரி 4 முற்பகல் வேளை… ஞாயிற்றுக் கிழமை என்றாலும் சென்னையில் விடுமுறை எடுக்காமல் வெயில் வீசிக் கொண்டிருந்தது.
இமாச்சல்லுக்கு சென்றிருந்த வெற்றி துரைசாமி சென்னையில் இருந்த தனது மனைவிக்கு இமாசல பிரதேசத்தில் இருந்து அலைபேசி செய்திருக்கிறார். சென்னை முன்னாள் மேயரும் அதிமுக மூத்த பிரமுகரும், மனித நேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமியின் ஒரே மகன்தான் வெற்றி.
‘ம்ம்மா…சிம்லாவுக்கு கெளம்பி போயிட்டிருக்கேன்.. ஃப்ளைட் பிடிச்சு இன்னிக்கு ஊருக்கு வந்துடுவேன்’ என்றதும் வெற்றியின் மனைவியின் முகத்தில் புன்னகை. அப்பா சாயந்தரம் வந்துடுவாரு என்றதும் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சித் துள்ளல்.
இங்கே வெயில் என்று இவரும், அங்கே குளிர் என்று அவரும் பேசிக் கொள்ள அலைபேசி உரையாடல் முடிந்தது.
வெற்றி துரைசாமி சொன்னபடி ஞாயிற்றுக் கிழமை மாலையே சென்னை வந்திருக்க வேண்டும். ஆனால் ஞாயிறு போய், திங்கள் போய், செவ்வாய் போய் இன்று புதன் கிழமை வரை வரவில்லை…
வெற்றிக்கு என்னாச்சு என்ற கேள்வி சைதை துரைசாமியின் குடும்பத்தினரை மட்டுமல்ல, அவருக்கு நெருக்கமான நண்பர்கள், நலம் விரும்பிகள், அரசியல் புள்ளிகள், பத்திரிகையாளர்கள் என பலரையும் பதைபதைக்க வைத்திருக்கிறது.
பிப்ரவரி 4 ஆம் தேதி கஷங் நுல்லா என்ற பகுதியில் சிம்லாவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர் வெற்றியும், அவரது நண்பர் கோபியும். சென்று கொண்டிருந்தபோது மலைப் பாதையில் பாறை ஒன்று உருண்டோடி வந்திருக்கிறது. அப்பகுதியின் டாக்சி டிரைவர்கள் எல்லாருமே இதுபோன்ற மண் சரிவுகளையும், மலைச் சரிவுகளையும் சந்தித்து கார் ஓட்டப் பழக்கப்பட்டவர்கள்தான்.
வெற்றி பயணித்த காரின் டிரைவரும் மலைப் பாதையில் திடீரென உருண்டு வந்த பாறை மீது மோதிவிடக் கூடாது என்பதற்காக சற்று திருப்பியிருக்கிறார். கடும் பனிப்பொழிவினால் அந்த மலைப்பகுதி சாலையே வழுக்கு பாறை போலத்தான் இருந்தது.
அதனால் கார் நிலைதடுமாறி சாலையில் இருந்து நழுவியது. அங்கே 200 அடிக்கு கீழ் சட்லெஜ் நதி வேகவேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
திடீரென மலைச் சாலையில் இருந்து ஆற்றில் விழுந்த காரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பார்த்துப் பதறிப் போனார்கள். கார் அருகே ஓடிச் செல்ல, வெள்ளை நிற கார் ஆற்றின் கரைக்கு சற்று தள்ளி உள்ளே ஆற்றுக்குள் செருகியிருந்தது. காரின் பக்கவாட்டு கதவெல்லாம் உடைந்த நிலையில் வெற்றியோடு அந்த காரில் பயணித்த கோபிநாத் காயங்களோடு பக்கத்திலே பாறையை பற்றிக் கொண்டு கிடந்திருக்கிறார்.
உடனடியாக அவரை மீட்ட பொதுமக்கள் பக்கத்திலே இருக்கும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்கிறார்கள். கொண்டு போகும்போதே தனது போனில் இருந்து திருப்பூரிலுள்ள வீட்டுக்கு போன் செய்திருக்கிறார் கோபி. ‘அய்யோ… இங்க ஆக்சிடென்ட் ஆயிடுச்சு…’ என்று பதைபதைப்போடு சொல்லியிருக்கிறார் கோபி.
அதேநேரம் அங்கே விபத்தை பார்த்த சட்லெஜ் கரையோர வாசிகள் போலீஸுக்கு தகவல் கொடுக்க, கொஞ்ச நேரத்தில் போலீஸார் அங்கே சென்றுவிட்டனர். படகு மூலம் சென்று கயிற்றைக் கட்டி காரை இழுத்துக் கொண்டிருந்தார்கள்.
இதற்கிடையே இங்கே திருப்பூரில் வெள்ளக்கோவில் பகுதியில் வசிக்கும் கோபியின் குடும்பத்தினர் கோபி சொன்ன தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வெள்ளக்கோவில் போலீசைத் தொடர்புகொண்டு விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள். கோபியோடு போனது யார் என்பதையெல்லாம் கேட்டுக் கொண்ட போலீஸார் அதை மேலிடத்துக்கு அனுப்பினர். அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதனுக்கு அருகே இருக்கும் சிலருக்கும் இந்த விபத்து தகவல் சென்றிருக்கிறது.
இதற்கெல்லாம் பிறகு அன்று மாலை 5 மணிக்கு மேல்தான் சைதை துரைசாமி வீட்டுக்கு இமாசலப்பிரதேசத்தில் நடந்த விபத்து பற்றிய தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.
ஞாயிற்றுக் கிழமை மாலை வாக்கில் வெற்றியின் தாயாருக்கு சில பேர் போன் செய்திருக்கிறார்கள்,
‘வெற்றி எங்க? இமாசல்ல ஏதோ ஆக்சிடென்ட்டுன்னு சொல்றாங்க…’ என்று சொன்னதும், தாயாரோ, ‘அப்படியா… வெற்றி காலையிலயே போன் பண்ணி சாயந்தரம் வந்துடறேன்னு சொல்லிட்டாப்ல. வந்துடுவான்… ’ என்று பதிலளித்திருக்கிறார்.’
கொஞ்சநேரத்தில் சில அலைபேசி அழைப்புகள் சைதை துரைசாமி குடும்பத்தினருக்கு தொடர்ந்து வந்தன.
பிப்ரவரி 4 ஆம் தேதியம் மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள்ளாக வெற்றியும் கோபியும் பயணித்த கார் விபத்துக்குள்ளாகி சட்லெஜ் நதிக்குள் விழுந்துவிட்டது. கோபி மீட்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். காரை ஓட்டிய டிரைவர் இறந்துவிட்டார். வெற்றியை காணவில்லை தேடி வருகிறோம் என்பதுதான் சைதை துரைசாமியின் வீட்டுக்கு சொல்லப்பட்ட தகவல்.
ஒரே மகன்…பாசத்தைக் கொட்டி வளர்த்தார் அவரது தாயார். ஆரம்ப காலத்தில் எல்லாம் சைதை துரைசாமிக்கு பெரிய அளவுக்கு பொருளாதார பின்புலமெல்லாம் கிடையாது. அப்போதைய நடுத்தர வாழ்க்கையில் கூட வெற்றி கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தவர். இப்படி பலப்பல நினைவுகள் தாயாருக்கு.
காலையில் போன் பண்ணி வந்துடுறேன்னு சொன்னாரே… இப்ப இப்படி சொல்றாங்களே… என வெற்றியின் மனைவி பதைபதைத்துக் கொண்டிருந்தார்.
தன்னோடு மனித நேய அறக்கட்டளையை சிறப்பாக கவனித்துக் கொண்ட வெற்றியை பற்றிய விதவிதமான நினைவுகள் தந்தையான சைதை துரைசாமிக்கு.
ஆனாலும் அவர்களுக்கு பெரிய நம்பிக்கை என்னவென்றால் வெற்றி சிறந்த ஸ்விம்மர். நீச்சல் அடிப்பதில் கெட்டிக்காரர். அதனால் ஆற்றில் கார் விழுந்தால் கூட எங்காவது நீந்தி கரையேறியிருப்பார் என்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
உடனடியாக சைதை துரைசாமி தனது பயிற்சி மையத்தில் படித்து ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக இருக்கும் உயரதிகாரிகளை எல்லாம் தொடர்புகொண்டார். தகவலைக் கேட்டதும் அவர்களுக்கும் அதிர்ச்சி. மனிதநேய அகாடமியில் படித்தவர்கள் இமாசல பிரதேசத்திலும் சிலர் பணியில் இருக்கிறார்கள். அவர்களிடமும் பேசியிருக்கிறார் சைதை துரைசாமி. அவர்களும் களத்தில் இறங்கினார்கள்.
இமாசல பிரதேசத்தில் கடும் பனிப் பொழிவாக இருந்த நிலையிலும் தேசிய பேரிடர் மீட்புப் படை மூலம் அந்த பகுதி முழுவதும் தேடத் தொடங்கினர். ஹெலிகாப்டர், டிரோன்கள் மூலமும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
தகவல் அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் போலீஸ் உயரதிகாரிகளை தொடர்புகொண்டு, ‘ இமாசல பிரதேச போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பேசி மீட்புப் பணியை தீவிரப்படுத்தச் சொல்லுங்க’ என்று உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தகவல் அறிந்து சைதை துரைசாமியிடம் பேசியதோடு… மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தொடர்புகொண்டு விஷயத்தை சொல்லி மீட்புப் பணியை துரிதப்படுத்த கேட்டிருக்கிறார்.
இமாசலப்பிரதேச மாநில காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் மீட்புப் பணியில் முழுமையான ஈடுபாடு காட்டி வருகிறார்கள்.
சைதை துரைசாமியின் மனித நேய அறக்கட்டளையில் பயின்றவர்கள் குடியரசுத் தலைவர் அலுவலகத்திலும் பணியாற்றி வருகிறார்கள். அவர்களும் இந்த விவகாரத்தில் அக்கறை காட்டி மீட்புப் பணியை துரிதப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்கள்.
இப்படி சைதை துரைசாமியின் மனித நேய உதவிகளைப் பற்றி அறிந்தோர், அவரால் பயன்பெற்றோர் என இந்தியா முழுதும் உள்ள அதிகாரிகளும் அரசியல் புள்ளிகளும் தங்களுக்கு ஏற்பட்ட இன்னலாக தங்கள் சக்தியை பயன்படுத்தி தேடுதல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.
அரசியலில் எத்தனையோ நேரடி சவால்களை அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட சைதை துரைசாமி தனிப்பட்ட முறையில் தனக்கு நேர்ந்திருக்கும் இந்த சவாலான சூழலிலும்… ‘தம்பி வந்துடுவான்…’ என்று தைரியமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த தைரியத்தில்தான் தன்னுடைய மனித நேய அகாடமி பிள்ளைகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. மாடல் எக்ஸாம் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்.
தர்மம் தலைகாக்கும் என்பார்கள். அந்த வார்த்தை மெய்ப்படும் என்றால், வெற்றி துரைசாமி, சட்லெஜ் நதியில் எதிர் நீச்சலடித்து எங்கேனும் முட்டிமோதி கரையேறி வரவேண்டும்!
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ICC Rankings : முதன்முறையாக ’முதலிடம்’ பிடித்த இந்திய பவுலர்!
பாக்கல… பாக்கல…பாக்கல… : அமித்ஷா அழைப்பு – நழுவிய எடப்பாடி