பாஸ்கர் செல்வராஜ்
இந்தியாவில் நிலவும் விலைவாசி உயர்வுக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் காரணம் இந்திய, அமெரிக்கப் பெருநிறுவனங்கள் உற்பத்தி, சந்தை, வர்த்தகம் ஆகியவற்றில் கொண்டிருக்கும் முற்றொருமை மட்டுமல்ல ஒன்றியம் எரிபொருளிலும் மூலதனம், வங்கி, காப்பீடு உள்ளிட்ட நிதித்துறைகளில் கொண்டிருக்கும் முற்றொருமையும் இதற்குக் காரணம். அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட மிகைமூலதனம் இந்திய சொத்துக்களையும் பசையான வருமானம் தரும் சேவைத்துறைகளையும் கைப்பற்றின.
முன்பு கிட்டத்தட்ட தொண்ணூறு விழுக்காடு பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்த வங்கி, காப்பீட்டுத் துறைகளையும் உள்ளூர் வியாபாரிகளிடம் இருந்த சில்லறை வர்த்தகத்தையும் நிதிமூலதனம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
மின்னணு தொழில்நுட்ப வர்த்தகப் போட்டியில் இருந்த சீனர்களை வெளியேற்றி தங்களது முற்றொருமையை நிலைநாட்டினார்கள். இந்த மூலதனத்தோடு உள்ளூர் வங்கி மூலதனத்திலும் கொழுத்த உள்ளூர் பெருநிறுவனங்கள் உற்பத்தி, தொலைத்தொடர்புத்துறை, சாலைகள், துறைமுகங்கள், விமான தளங்கள் உள்ளிட்ட போக்குவரத்தைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இவற்றில் தங்களது முற்றொருமையை நிலைநாட்டி தங்களின் பங்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விலைகளைத் தீர்மானிப்பவை எவை?
ஏன் திட்டமிட்டு இந்தத் துறைகளை கைப்பற்றி போட்டியாளர்களை வெளியேற்றி முற்றொருமையை ஏற்படுத்துகிறார்கள்? என்ற கேள்வி இங்கே எழுவது இயல்பானது. தற்போதைய உற்பத்தி முறையில் பொருட்களின் விலைகளைத் தீர்மானிப்பவை எரிபொருள், சிமெண்ட், இரும்பு, போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் இணையதள கட்டமைப்புகள் ஆகியவை. பொருட்களை உருவாக்கி சந்தைப்படுத்தத் தேவையான இவற்றின் விலைகளைப் பொறுத்தே எல்லா பொருட்களின் விலைகளும் அமையும். இவற்றின் விலைகளில் ஏற்படும் மாற்றம் அனைத்துப் பொருட்களிலும் எதிரொலிக்கும்.
இந்தச் சரக்குகளின் மதிப்பை நாடுகளின் நாணயங்கள் தெரிவிக்கும். சந்தையில் இந்த நாணயங்களின் தேவையை இந்தப் பொருட்களின் தேவை நிர்ணயிக்கும். எல்லோரும் இந்தச் சரக்குகளை உற்பத்தி செய்யும்போது அவர்களின் உற்பத்தி அளவுகளைப் பொறுத்தும் மற்றவர்களுக்கு இந்தச் சரக்குகளை அளிக்கும் அளவுகளைப் பொறுத்தும் அந்தந்த நாடுகளின் நாணயங்கள் மதிப்பைப் பெறும். ஒருவர் மட்டும் இந்த சரக்கின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி முற்றொருமையை பெற்றால் அனைவரும் அவரிடம் மட்டும்தான் அந்த சரக்கை வாங்கமுடியும்.
சரக்கின் விலை!
அப்போது அவர் சொல்வதுதான் அந்த சரக்கின் விலை (pricing power). அப்போது அந்த நாட்டு நாணயத்தின் தேவைகூடி அதன் மதிப்பு கூடும். இந்த முற்றொருமை உடையும்போது போட்டியில் அச்சரக்கின் விலை வீழ்கிறது. விலையைத் தீர்மானிக்கும் ஆற்றலை அந்நாடு இழக்கிறது. அதன் நாணயத்தின் தேவை குறைந்து தனது மதிப்பை இழக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிமெண்ட், இரும்பு, இவற்றின் மூலம் உருவாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புப் பொருட்களில் முற்றொருமை கொண்டிருந்த இங்கிலாந்து இவற்றின் விலைகளைத் தீர்மானிக்கும் ஆற்றலைப் பெற்றது.
அதன் நாணயம் உயர் மதிப்பைப் பெற்று அந்நாடு உலகையாண்டது. இத்தொழில்நுட்பங்கள் மற்ற நாடுகளுக்குப் பரவியதும் சந்தைக்கான போட்டி உண்டாகி அது போரில் முடிந்தது வரலாறு. அந்தப் போராட்டத்தின் முடிவில் இரும்பு உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தி உலகம் முழுக்க பரவி அதன் விலை வீழ்ந்தது. எரிபொருளிலும் பின்னர் உருவான மின்னணு தொழில்நுட்பங்களிலும் ஏகபோகம் கண்ட அமெரிக்காவின் டாலர் அந்த இடத்தைப் பிடித்தது. இந்த முற்றொருமையைப் பிரதிபலிக்கும் ஒற்றைத்துருவ உலகம் உருவானது.
எரிபொருள் ஏகபோகம்!
எரிபொருள் ஏகபோகத்தை உடைக்கச் செய்த முயற்சிகளைத் தடுக்க அரபுநாடுகளில் அமெரிக்கா மேற்கொண்ட போர்கள் நாமறிந்தது. 2008 நெருக்கடியைத் தீர்க்க தனது டாலர் வலிமையைப் பயன்படுத்தி மிகையாக டாலர்களை உற்பத்தி செய்தது. அதனால் நீர்த்துப்போன டாலரின் மதிப்பை 2012இல் மறுமதிப்பீடு செய்து அனைவரையும் கட்டாயப்படுத்தி ஏற்கவைத்தது. இப்படி நீர்த்துப்போகச் செய்வதால் யாருக்கு நட்டம்?
அமெரிக்கப் பணக்காரர்கள் தங்களின் சொத்தின் மதிப்பை டாலரில் தெரிவிக்கிறார்கள். டாலர் மதிப்பு குறையக்குறைய சொத்தின் மதிப்பை தெரிவிக்கும் சுழியங்களின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொள்கிறார்கள். முன்பு பில்லியன் என்றால் இப்போது டிரில்லியன். அவர்கள் விற்கும் பொருட்களின் விலை முன்பு ஆயிரம் என்றால் இப்போது மில்லியன். அதே பத்து கத்தரிக்காய் முன்பு நூறு டாலர் இப்போது நூற்றைம்பது டாலர் அவ்வளவே!
டாலரின் பிடியில் இருந்து விலகிய சீனா, ரஷ்யா
முன்பு நூறு டாலர் இருப்பாகவோ சம்பளமாகவோ வாங்கிய நீங்களும் நானும் நூற்றுபத்து கையில் வைத்திருப்போம். ஆனால் அதனைக் கொண்டு எட்டுக் கத்தரிக்காய்தான் இப்போது வாங்கமுடியும். நமக்கு இதையெல்லாம் பற்றி சிந்திக்க விவாதிக்க விருப்பமோ அக்கறையோ நேரமோ இல்லை. ஆனால் டாலரைப் பில்லியன் கணக்கில் கையிருப்பாக வைத்திருப்பவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். அதனால் டாலர் சொத்துக்களை வைத்திருந்த நாடுகளான சீனாவும் ரசியாவும் டாலரின் பிடியில் இருந்து விலக முடிவெடுத்து சொந்த நாணயத்தில் எண்ணெய் வர்த்தகம் செய்யத் தொடங்கின. அதனைத் தடுக்க அமெரிக்கா ரஷ்யாவுடன் மறைமுகப் போர்களில் இறங்கியது.
போதாக்குறைக்கு தொலைத்தொடர்பு, இணையத் தொழில்நுட்பங்களைக் கைக்கொண்ட சீனா போட்டிக்கு வந்தது. அமெரிக்கா அதில் கொண்டிருக்கும் முற்றொருமை உடைவதைத் தடுக்க சீனாவுடன் வர்த்தகப் போரில் இறங்கியது. ஒற்றைத்துருவம் உடைப்பு காண ஆரம்பித்தது. இந்த உடைப்பின்போது இந்திய உற்பத்தியை டாலர் நிதிமூலதன ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்து தனது மின்னணு தொழில்நுட்பக் கட்டமைப்பை நிறுவி அதில் இந்திய வர்த்தகம் மற்றும் சேவைத்துறைகளை இணைத்து மின்னணு வர்த்தகத்தைக் கைப்பற்றியது.
அமெரிக்காவின் இந்த ஆதிக்க நெருக்கடியை சமாளிக்க இந்தியா சீன முதலீடுகளையும் தொழில்நுட்பங்களையும் அனுமதித்து இந்தப்பக்கம் ஒருகால் அந்தப்பக்கம் ஒருகால் என்ற சமநிலையைப் பேண முயன்றது. குஜராத் கூட்டுக்களவாணிகளுடன் கூட்டமைத்த அமெரிக்கா எல்லைப் பிரச்சனையைக் காரணம் காட்டி சீனாவை வெளியேற்றி இந்திய மின்னணு தொழில்நுட்பக் கட்டமைப்புகளில் முற்றொருமையைப் பெற்றது. அவர்களுக்கு ஒத்துழைத்த அம்பானிக்கு தொலைத் தொடர்பும் அதானிக்கு போக்குவரத்துக் கட்டமைப்புகளும் கிடைத்தது.
இந்த மூவரும் உள்கட்டமைப்புகளில் கொண்டிருக்கும் முற்றொருமையைப் பயன்படுத்திக்கொண்டு விலைகளை உயர்த்தி தங்களின் மூலதனத்துக்கான வாடகையை வசூல் செய்கிறார்கள். டாலர் மூலதனத்தில் தொழில்நுட்பத்தை வாங்கி இந்திய ரூபாயில் வாடகையை வசூலிக்கும் கூட்டுக்களவாணிகள் சொந்த டாலர் மூலதனம் மற்றும் தொழில்நுட்பத்தைக் கொண்ட அமெரிக்கப் பெருநிறுவனங்களின் லாபவிகிதத்துடன் போட்டியிட முடியாமல் ஒன்றியத்தின் வரிச்சலுகையின் மூலம் அதனை சமன் செய்கிறார்கள்.
இந்த இழப்பை ஒன்றியம் எரிபொருளில் கொண்டிருக்கும் முற்றொருமையைப் பயன்படுத்தி விலைகளையும் வரிகளையும் உயர்த்திச் சமாளிக்கிறது. இவர்கள் வாங்கிய ரூபாய் கடன்மதிப்பைவிட குறைவாக திருப்பிச் செலுத்தும் விதமாக ஒன்றியம் வட்டிவிகிதத்தைக் குறைவாக வைக்கிறது. கரும்பு தின்னக் கூலி கொடுக்கிறது. இந்திய மத்திய வங்கி இவர்களின் கைப்பாவையாகி தனது சட்டப்பூர்வமான கடமையில் இருந்து தவறுகிறது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்தவண்ணம் இருக்கிறது.
ரூபாயில் தங்களின் சொத்து மதிப்பைத் தெரிவிக்கும் இந்திய பணக்கார வர்க்கம் அமெரிக்கப் பணக்காரர்களைப்போல சுழியத்தின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே செல்கிறது. அது விற்கும் பொருட்களின் விலைகளை ஏற்றிக்கொண்டே இருக்கிறது. ரூபாயில் சம்பளம் பெறும் இந்திய தொழிலாளர்களால் வாங்கமுடியும் பொருட்களின் அளவு குறைந்துகொண்டே செல்கிறது.
முன்பு மலிவான டாலரைக் கொண்டு சந்தையைப் பிடித்த அமெரிக்கப் பெருநிறுவனங்கள் இப்போது டாலரின் மதிப்பை உயர்த்தி ரூபாயின் மதிப்பை மேலும் சரித்து டாலர் நிதிமூலதனத்துக்குக் கூடுதல் ரூபாய்களை வட்டி வாடகையாக வசூலிக்கப் பார்க்கிறது. அது மக்களின் வாழ்விலும் கூட்டுக்களவாணிகளின் நலனிலும் பாரதூரமான விளைவை ஏற்படுத்தும். அதனைத் தடுக்க டாலருக்குப் பதிலாக ரூபாயில் எண்ணையை வாங்கி டாலர் இழப்பைக் குறைத்து ரூபாய் மதிப்பைப் பெருமளவில் சரியாமல் தடுத்துச் சமாளிக்கப் பார்க்கிறது இந்தியா.
தொலைத்தொடர்பு, மின்னணு தொழில்நுட்ப முற்றொருமை கூட்டுக் களவாணிகளுக்கும் வேண்டும் என்பதால் சீனாவுடனான மோதலை மட்டும் தொடர்கிறது பார்ப்பனிய ஒன்றியம்.
இந்தியா-ரஷ்யா கூட்டு!
ரஷ்யாவுடன் ஐரோப்பாவை மோதவைத்து அதிக விலையில் அவர்களுக்கு எரிபொருளை விற்று நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை இலாபமாகக் கறக்கின்றன அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள். இந்திய ரூபாயின் மதிப்பை வீழ்த்தி அப்படி இந்தியாவிலும் கறக்க எண்ணிய அந்நிறுவனங்களின் ஆசையில் மண்ணள்ளிப் போட்டது இந்தியாவின் ரசியக் கூட்டு. அவர்களின் எரிபொருள் முற்றொருமையை உடைத்து அவர்களின் லாபவிகிதத்தைக் குறைக்கும் இந்தியாவின் இந்த நகர்வை எதிர்கொண்டு ஒன்றிய பார்ப்பனியத்தை வழிக்குக் கொண்டுவர அதானியின் சொத்துகளைத் தாக்கி அதன் மதிப்பைச் சரியவைக்கிறது மேற்குலகம்.
எல்ஐசியில் இருக்கும் மக்களின் பணத்தைக் கொட்டி அதானியின் சொத்துமதிப்பைக் காக்கிறது ஒன்றியம். அதனைக் கையில் எடுத்து அரசியல் செய்து ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறது காங்கிரஸ். முதலில் மலிவான மூலதனத்தைக் கொண்டு உற்பத்தியைக் கைப்பற்றி தங்களின் உள்கட்டமைப்புகளின்கீழ் அதனைக் குவித்து முற்றொருமைப் பெறுகிறார்கள்.
பின்பு உள்கட்டமைப்புச் சேவைகளுக்கான கட்டணத்தையும் அதன்மூலம் பொருட்களின் விலைகளை உயர்த்தியும் அதனைச் செலுத்தும் நாணயங்களின் மதிப்பை மாற்றியும் இலாபத்தைக் குவிக்கிறார்கள். மக்களும் மற்றவர்களும் இவர்களிடம் தங்களின் செல்வத்தை இழந்து கடனாளியாகிறார்கள். நாடு விலைவாசி உயர்விலும் வேலைவாய்ப்பின்மையிலும் சிக்குகிறது.
சுரண்டல் பொறிமுறையின் மையம்!
இவற்றை எல்லாம் தொகுத்துப் பகுத்தாராயும்போது எரிபொருள், தொலைத்தொடர்பு, போக்குவரத்து, மின்னணு தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளில் நிலவும் முற்றொருமையும் இவற்றின் விலைகளைத் தெரிவிக்கும் நாணயங்களின் மதிப்பைத் திரிப்பதும்தான் இந்த சுரண்டல் பொறிமுறையின் மையமாக விளங்குவது புலனாகிறது. ஆகவே அமெரிக்க, இந்தியப் பெருநிறுவனங்களின் முற்றொருமையை உடைப்பது மட்டுமல்ல ஒன்றியம் எரிபொருளிலும் மூலதன நிதியத்துறைகளிலும் கொண்டிருக்கும் முற்றொருமையையும் சேர்த்து உடைப்பதுதான் இந்தப் பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வு.
மூவரின் முற்றொருமையையும் உடைப்பதற்கு முன்னதாக இது உருவானது எப்படி? நாளை பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு:
பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர். அவற்றை நல்ல தமிழில் கட்டுரைகளாக வடித்து வருகிறார்.
சிறப்புக் கட்டுரை: பெருநிறுவனங்களின் முற்றொருமையை மட்டும்தான் உடைக்கவேண்டுமா? பகுதி-2
சிறப்புக் கட்டுரை: ஐந்து பெருநிறுவனங்களை (Big 5) மட்டும்தான் உடைக்கவேண்டுமா?