வயநாட்டில் நிலநடுக்கம் நடந்த முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து, திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால், தன்னார்வலராக பணியாற்றுபவர்களின் பெயர்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனினும், அங்கு திருட்டு சம்பவங்கள் குறைந்தபாடில்லை.
சூரல்மலை பகுதியை சேர்ந்த முகமது அஷரப் என்பவரின் மகன் அமல்ஜான் தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தவர். இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். படிக்கும் போதும், கடற்படையில் பணியாற்றிய போதும், அமல்ஜான் பல்வேறு பதக்கங்களை வென்றிருந்தார்.
இந்த பதக்கங்களை தனது வீட்டில் பெருமையாக மாட்டி வைத்திருந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதிக்கு பிரதமர் மோடி வந்த போது, அமல்ஜான் குடும்பத்தினர் உறவினர்களை சந்திக்க சென்றிருந்தனர்.
அப்போது, வீட்டில் புகுந்த திருடன் ஒருவன், தங்க நகைகள், ரேடோ வாட்ச் , பதக்கங்களை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டான். அமல்ஜான் குடும்பத்தினர் கடந்த சனிக்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது, 3 பவுன் நகைகள், 30 ஆயிரம் மதிப்புள்ள வாட்ச் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதோடு, வீட்டில் வைக்கப்பட்டிருந்த அமல்ஜான் வென்ற பதக்கங்களையும் கொள்ளையன் திருடி சென்று விட்டான்.
இதையடுத்து, அமல்ஜானின் தாய் மாமா ஹூமாயூன் கபீர் ஃபேஸ்புக் வழியாக திருடனுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில், பிரதமர் வந்த தினத்தில் அத்தனை பாதுகாப்பையும் மீறி நீங்கள் எங்கள் வீட்டை உடைத்து திருட்டை அரங்கேற்றியுள்ளீர்கள். அப்படியென்றால், உங்களின் பணத்தேவை குறித்து நாங்கள் உணர்ந்து கொண்டுள்ளோம்.
தங்கம் , ரேடோ வாட்ச் போன்றவற்றை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், ஒரு பின்தங்கிய கிராமத்தில் இருந்து தேசிய அகாடமியில் படிப்பது சாத்தியமல்லை. ஒரு இளைஞர் எத்தனையோ தடைகளை கடந்து,பல்வேறு சாதனைகளை படைத்து வென்ற பதக்கங்களை மட்டும் திருப்பி தந்து விடுங்கள் என்று உருக்கத்துடன் கூறியுள்ளார்.
அந்த பதக்கங்களுக்கு விலை போட முடியாது என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமென்றும் தன் பதிவு வழியாக திருடனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை…மக்கள் அதிர்ச்சி!
ஆவணி மாத நட்சத்திர பலன்: மிருகசீரிஷம் (17.8.2024 முதல் 16.9.2024 வரை)