வயநாடு நிலச்சரிவு ஏராளமானோரின் உயிரை பலிவாங்கியதோடு மட்டுமல்லாமல், பலரது வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. அந்த வகையில், நிலச்சரிவில் பெற்றோர், ஒரே தங்கையை பறி கொடுத்த ஸ்ருதி என்ற இளம் பெண்ணின் வாழ்க்கையில் இப்போதும் எமன் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறான்.
வயநாடு மாவட்டம் சூரல்மலை சிவண்ணன், அவரின் மனைவி சபிதா, மகள்கள் ஸ்ருதி, ஸ்ரேயா , தாத்தா பாட்டி ஆகியோர் ஒரு வீட்டில் வசித்துவந்தனர். பக்கத்து வீட்டில் சிவண்ணனின் சகோதரர், அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் வசித்துவந்தனர். இப்படி, 9 பேர் கொண்ட அவர்களது குடும்பத்தில் இப்போது ஸ்ருதி மட்டுமே மீதமிருக்கிறார்.
ஸ்ருதி கோழிக்கோடு மிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். நிலச்சரிவின் போது, அங்கு பணியில் இருந்ததால் உயிர் தப்பித்தார். நிலச்சரிவில் சிக்கி ஸ்ருதியின் குடும்பத்தினர் அனைவரும் இறந்து போனார்கள். அதோடு, ஸ்ருதியின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த 15 பவுன் நகைகள், 4.5 லட்சம் பணமும் மண்ணோடு மண்ணாக புதைந்து போனது.
பெற்றோர், சகோதரி உள்பட 9 பேரை பறி கொடுத்து விட்டு தவித்து கொண்டிருந்த ஸ்ருதிக்கு ஒரே ஆறுதலாக வருங்கால கணவர் ஜென்சன் மற்றும் அவரின் குடும்பத்தினர்தான் இருந்தனர். ஜென்சனுக்கும் ஸ்ருதிக்கும் வரும் டிசம்பர் மாதத்தில் திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருந்தது.
இந்த நிலையில், ஜென்சனுடன் ஸ்ருதி மற்றும் உறவினர்களுடன் ஒரு வேனில் நேற்று சென்று கொண்டிருந்துள்ளார். வேனை ஜென்சனே ஓட்டியுள்ளார். கோழிக்கோடு- கொல்லேகால் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளாரம்குன்னு என்ற இடத்தில் வேன் சென்ற போது, எதிரே வந்த பஸ் மோதியது.
இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்தனர். ஸ்ருதியும் ஜென்சனும் படுகாயமடைந்தனர். இருவரும் மேப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஜென்சனுக்கு மண்டை ஓடு உடைந்து உள்ளே ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. டாக்டர்கள் தற்போதைய சூழலில் ஒன்றும் சொல்ல முடியாது. ஜென்சனுக்கு ரத்தக்கசிவு நின்றால்தான் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனர். ஸ்ருதியின் வாழ்க்கையை நினைத்து உறவினர்கள் கலங்கி நிற்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
6 வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்த தந்தை… அதிர்ச்சியில் உறைந்த மலைகா!
ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் டீசல் விலை : மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!