வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (ஆகஸ்ட் 1) காலை நிலவரப்படி 276ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 1,500 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 3வது நாளாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
கேரளாவில் விடாது கொட்டித்தீர்த்த மழையால் வயநாட்டின் மேப்பாடு, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நள்ளிரவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 500க்கு மேற்பட்ட வீடுகளும், 1000க்கு மேற்பட்டோரும் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டனர்.
அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை 276 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தொடர்ச்சியாக பெய்து வரும் மழைக்கு நடுவில் பாலங்கள் சாலைகள் அடித்து செல்லப்பட்ட நிலையில் மீட்பு பணியில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மீட்பு பணிகளை வேகப்படுத்த தற்காலிக இரும்பு பாலம் அமைக்கும் பணி மழைக்கு நடுவே நேற்று இரவு தொடங்கிய நிலையில் தற்போது நிறைவு பெற்றுள்ளது.
இதன்மூலம் நிலச்சரிவால் முதன்முதலில் கடும் பாதிப்பை சந்தித்த முண்டக்கை பகுதிக்கு இன்று தான் உரிய வாகனங்களுடன் மீட்பு படை செல்ல உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதற்கிடையே மாநிலத்தின் பல இடங்களில் இருந்து ஆம்புலன்ஸ்களும், மருத்துவக் குழுக்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் சென்ற மீட்பு குழுவும் அங்கு மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இமாச்சல், மணிப்பூர், கேரளா… தேசியத்துக்கு வழிகாட்டும் தாய்மை நிறைந்த தமிழ்நாடு
வயநாடு நிலச்சரிவு : கேரளாவுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி செய்த விக்ரம்
ரயில் ஓட்டுநர்களின் பணி நேரம் குறித்து ஆய்வு : தீர்வு எப்போது?