வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் ஒரு தமிழரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மண்ணில் புதையுண்டதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இன்னும் 98 பேரை காணவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன்,
“கேரளா இதுவரை கண்டிராத மிகப் பெரிய இயற்கை பேரழிவை சந்தித்துள்ளது. முதல் நிலச்சரிவு அதிகாலை 2 மணிக்கு ஏற்பட்டது. 4.30க்கு இரண்டாவது முறையாக நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை பகுதியில் உள்ள ஒரு பள்ளி முழுவதும் மண்ணின் அடியில் புதைந்துவிட்டது.
நேற்றிரவு தூங்கச் சென்றவர்கள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டனர். இதுவரை மீட்கப்பட்டவர்களில் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
5 அமைச்சர்கள் ஒருங்கிணைந்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சூரல்மலை பேரிடர்கள் பாதிக்கும் பகுதி கிடையாது. ஆனால், முண்டக்கை நிலச்சரிவு அதிகம் ஏற்படக்கூடிய பகுதி. இந்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவும், பாறைகளும் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரல்மலை பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டது.
கேரளாவில் 64 – 224 மி.மீ மழை பெய்யும் என்று கூறப்பட்டது. ஆனால், 48 மணிநேரத்தில் 572 மி.மீ மழைப் பொழிந்துள்ளது” என்று கூறினார்.
இந்தசூழலில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் மற்றொரு தமிழரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஐயங்கொல்லியைச் சேர்ந்த கல்யாண்குமாரின் (60) உடல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
வயநாடு சூரல்மலையில் உள்ள கோயிலில் இவர் பூசாரியாக இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக வயநாடு நிலச்சரிவில் சிக்கி கூடலூரை சேர்ந்த இளைஞர் காளிதாஸ் உடல் மீட்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு நபரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.
வயநாட்டில் இயற்கையின் கோரத்தாண்டவத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120ஐ கடந்திருக்கிறது. இரவிலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி ஏழைகளிடம் அபராதம் வசூலிப்பதா?: ராகுல் காட்டம்!
வயநாடு நிலச்சரிவு : நீலகிரியை சேர்ந்தவர் பலி!