லெபனானில் பேஜரைத் தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 18) நாட்டின் பல்வேறு இடங்களில் வாக்கி டாக்கிகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியது. இதில் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர்.
இஸ்ரேல் – பாலஸ்தீன் போர் நடந்துவரும் நிலையில் கடந்த 17ம் தேதி மாலை 4 மணியளவில் லெபனானில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திவந்த 1000 பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்தது. இதில், 12 பேர் பலியாகினர். சுமார் 3000க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில், ஹிஸ்புல்லா பிரதிநிதி அலி அம்மாரின் மகன் முகமது மஹ்தி கொல்லப்பட்டார். ஈரான் தூதரான முஜூதாபா அமானியின் கண்பார்வை பறிபோனதால் இந்த சம்பவம் உலகளவில் கவனம் பெற்றது.
இந்நிலையில் நேற்று லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திவந்த ஆயிரக்கணக்கான வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இதில் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளதாகவும், 450க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததுள்ளனர்.
”பலருக்கு உள் இரத்தப்போக்கு, வயிறு மற்றும் உடலின் பிற பகுதிகளில் காயங்கள், மூளை ரத்தக்கசிவுகள் ஆகியவை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என லெபனானின் சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் எச்சரித்துள்ளார்.
வாக்கி டாக்கிகள் மட்டுமின்றி, சில இடங்களில் லேப்டாப், ரேடியோ, தொலைபேசிகள் வெடித்து சிதறியுள்ளன.
இந்த சம்பவங்கள் பெரும்பாலும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் நடந்தேறியுள்ளது.
இஸ்ரேல் தான் காரணம் : ஹிஸ்புல்லா
இந்த சதிச்செயல் பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில், இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் இந்த சதித்திட்டத்தை தீட்டியிருக்கலாம் என ஹிஸ்புல்லா அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும் இராணுவம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
பேஜர், வாக்கிடாக்கிகள் தயாரிக்கும் போதே, இஸ்ரேல் உளவாளிகளின் உதவியுடன் அதில் வெடிபொருள் வைக்கப்பட்டிருக்கலாம். ஸ்கேனர் உள்ளிட்ட எந்த கருவியாலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இது வடிவமைக்கப்பட்டு, ரகசிய குறியீடு பெற்ற சில நொடிகளில் வெடிமருந்து பேட்டரியுடன் சேர்ந்து வெடிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டிருக்கிறது என ஹிஸ்புல்லா அமைப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பேஜர் வாக்கி டாக்கிகள் வெடித்ததை அடுத்து பேட்டரியுடன் செயல்படும் அனைத்து தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டை தவிர்க்குமாறு ஹிஸ்புல்லா அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பக குழுவின் மத்திய கிழக்கு இயக்குனர் லாமா ஃபைக் கூறுகையில், ”தாக்குதல் நடத்த வேண்டிய சரியான இருப்பிடத்தை அறியாமல், பொதுமக்கள் உட்பட பலரும் பயன்படுத்தும் சாதனத்தில் வெடிகுண்டு பயன்படுத்துவது சட்டவிரோதமானது. இந்த கண்மூடித்தனமான தாக்குதல் இராணுவ இலக்குகள் மற்றும் பொதுமக்களை வேறுபாடு இல்லாமல் தாக்கும். இந்த சம்பவங்கள் குறித்து உடனடியாக, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று லாமா கூறியுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களில் நடந்த இந்த சம்பவத்தால் இதுவரை இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு மருத்துவர் உட்பட குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஒரே நேரத்தில் நடந்த தொடர் வெடிப்புகள் ஒட்டுமொத்த லெபனான் நாட்டு மக்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இந்தியா – வங்கதேசம் முதல் டெஸ்ட்… ரூ.200க்கு டிக்கெட் விற்பனை: முழு விவரம்!
இருளில் வாழ்ந்த பழங்குடியினருக்கு கிடைத்த ‘மின்’ ஒளி!