ரஷ்யா உக்ரைன் போரில் ரஷ்யாவுக்குப் பக்கபலமாக இருந்தது வாக்னர் குழு. தனியார் ராணுவம், புதினின் தனி ராணுவம் எனப் பல்வேறு கோணங்களில் விமர்சிக்கப்பட்ட இந்தக் குழு தற்போது ரஷ்யாவுக்கு எதிராகவே களமிறங்கியிருக்கிறது.
உக்ரைனின் பெரும் பகுதியைக் கைப்பற்ற உதவிய இந்தக் குழு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக இந்தக் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும், ரஷ்யாவில் ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்த்துவேன் என்றும் சபதமேற்றிருக்கிறார்.
இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகியிருக்கும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்,
“நாம் இப்போது உலகளவில் ரஷ்ய மக்களின் வாழ்வுக்காகவும், பாதுகாப்புக்காகவும் போராடிக்கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில் கருத்து வேறுபாடுகளுக்கு இடம் கொடுக்கலாமா… இருந்தும் கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஆயுதக்குழு மீது நமது நடவடிக்கை மிகக் கடுமையானதாக இருக்கும்.
மாஸ்கோவில் தீவிரவாதத் தடுப்பு நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரோஸ்டோவில் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இந்தச் சூழலில் ரஷ்ய மக்கள், ராணுவம், சட்ட அமைப்புகள் அனைத்தும் ஆயுதக் குழுவுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும்.

வாக்னர் குழு முதுகில் குத்தி நம்பிக்கைத் துரோகம் செய்திருக்கிறது. ரஷ்யா நீண்ட வரலாறு கொண்ட நாடாக செழித்தோங்க வேண்டும் என்றே பாடுபடுகிறோம். இந்தச் சூழலில் தனிநபர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் தேசத்துரோகமாகும்.
நாட்டையும் நாட்டு மக்களையும் இதிலிருந்து காப்பாற்றுவோம். இந்த ஆயுதக் கிளர்ச்சியைத் தூண்டிய தலைவர் கிரிமினல் குற்றம் புரிந்திருக்கிறார். அவர்மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்.
எனவே, அவரைப் பின்பற்றாமல் வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்திடம் சரணடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசியிருக்கிறார்.

புதினின் பேச்சைத் தொடர்ந்து, வாக்னர் குழு, “ரஷ்யா விரைவில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும்” எனத் தெரிவித்திருக்கிறது.
இதற்கு முன்பாக வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் வெளியிட்டிருக்கும் ஆடியோ கிளிப்பில்,
“ரஷ்யா குறிவைத்து எங்கள் படை வீரர்களைத் தாக்குகிறது. ரஷ்யாவின் ராணுவம் எங்கள் முகாம்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.
எனவே, ரஷ்யாவின் ஆட்சியை நிச்சயம் கவிழ்ப்போம். 25,000 பேர், பின்னர் மேலும் 25,000 பேர் எனப் போராளிகள் அனைவரும் ரஷ்ய ஆட்சிக்கு எதிரான போரில் இறக்கத் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “அழிவின் பாதையைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம். ரஷ்யாவின் பலவீனம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உக்ரைனில் எத்தனை நாட்கள் தனது படைகளை வைத்துள்ளதோ, அவ்வளவு பெரிய பிரச்சினை ரஷ்யாவுக்கு ஏற்படும்” என்று பதிவிட்டுள்ளார்.
ராஜ்
மின் கட்டண உயர்வு: மூடப்படும் நிலையில் சேலம் குறு, சிறு நிறுவனங்கள்!
கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே க்ரில் உணவுகள்… கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!