அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி விருப்ப மனு அளித்துள்ளார்.
அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான தேர்தல் பிரச்சாரங்களையும் ஜோ பைடன் ஏற்கெனவே தொடங்கிவிட்டார்.
குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதாக அறிவித்தார். இந்த தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிடுவார் என்ற தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பை எதிர்த்து விவேக் ராமசாமி போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்துள்ளார்.
இது குறித்து முன்னதாக, அமெரிக்கா நாட்டின் ’பொலிடடிக்கோ ‘ பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியில், “அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகிறேன்” என்று விவேக் ராமசாமி கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு முன்னதாக, அதே கட்சியைச் சேர்ந்தவரும் ஐநாவுக்கான அமெரிக்க பிரதிநிதியாக இருந்த இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹேலி டிரம்பை எதிர்த்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.
குடியரசு கட்சி சார்பில் 3 பேர் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால் பெரும்பான்மை கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற இப்போது கடும் போட்டி நிலவுகிறது.
யார் இந்த விவேக் ராமசாமி
37 வயதாகும் விவேக் ராமசாமி கேரள மாநிலம் வடக்கன்சேரியை பூர்வீகமாகக் கொண்டவர். அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்த இவரது தந்தை எலெக்ட்ரிகல் இன்ஜினியராகவும், தாய் கீதா ராமசாமி மனநல மருத்துவராகவும் பணியாற்றி வருகின்றனர்.
அமெரிக்காவின் சின்சினாட்டி பகுதியில் பிறந்த இவர், ஹார்வர்ட் பல்கலையில் இளங்கலை பட்டம் முடித்தார். பின்னர் யேல் பல்கலையில் சட்டம் பயின்றுள்ளார். துவக்கத்தில் பயோடெக் தொழில் முனைவோராக வலம் வந்த விவேக் ராமசாமி, அதில் பல சாதனைகள் செய்தார்.
இவர் தயாரித்த 5 மருந்துகளுக்கு FDA எனப்படும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கி அடுத்தகட்டத்திற்கு இவரை அழைத்துச் சென்றது.
கடந்த 2014 ஆம் ஆண்டு மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கி அதை வெற்றிகரமான செயல்படுத்தி லாபத்தை அடைந்தது மட்டுமின்றி அமெரிக்காவில் முக்கியமான தொழில் அதிபர்களுள் ஒருவராக மாறினார் விவேக் ராமசாமி. இவர் நேஷன் ஆஃப் விக்டிம்ஸ் மற்றும் ஒரு சுயசரிதை என இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.
இவரது தற்போதைய சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலர்களுக்கும், அதாவது சுமார் இந்திய மதிப்பில் ரூ.4,140 கோடிக்கும் அதிகமாக இருக்கும்.
அதிபர் தேர்தல் குறித்து இவர் பேசும்போது, “கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ட்ரம்ப் செய்ததை வருகிற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் நான் செய்ய விரும்புகிறேன்.
ட்ரம்பை போலவே அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் தொழில்முனைவோராக நுழைந்து வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் குறைந்த எதிர்பார்ப்புகளுடன் பெரிய அளவில் ஆதரவாளர்களைத் திரட்ட முடிவெடுத்துள்ளேன்.
இதுபோன்ற முயற்சிகள் என்னை அதிபர் பதவியை நோக்கி அழைத்துச் செல்லும்” என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார்.
மோனிஷா
தொடங்கியது இந்தியாவின் யூபிஐ- சிங்கப்பூரின் பே நவ் டிஜிட்டல் பரிமாற்றம்!
“கமலாலயத்தில் ஸ்டாலின்… திடீர் பரபரப்பு!
அலுவலகக் கூட்டங்களில் டீ, காபிக்கு பதிலாக ‘மில்லட் பால்’!