கேரளா அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணைக் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யா என்ற கல்லூரி மாணவியை சதீஷ் என்ற இளைஞர் ரயிலில் தள்ளி கொடூரமாகக் கொலை செய்தார்.
சத்யா இறந்த சோகம் தாங்காமல் அவரது தந்தையும் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து சதீஷிடம் விசாரித்த போது, சத்யா தன்னை காதலிக்க மறுத்ததால் தான் அவளைக் கொலை செய்தேன் என்று தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் என்றும் வாக்குமூலம் கொடுத்தார்.
சதீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை தீபாவளிக்குப் பிறகு சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
சத்யா கொலை சம்பவத்தின் பரபரப்பும் தாக்கமும் இன்னும் குறையாத நிலையில் கேரளா மாநிலத்தில் ஒருதலை காதல் தொடர்பாக ஒரு பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
விஷ்ணு பிரியா கொலை
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்து பறம்பு அருகே உள்ள பானூர் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரியா (23). இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்தார்.
விஷ்ணு பிரியாவின் தந்தையின் நெருங்கிய உறவினர் ஒருவர் மரணமடைந்ததால் வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் நேற்று (அக்டோபர் 22) இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தனர்.
அப்போது விஷ்ணு பிரியா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இறுதிச்சடங்கு முடித்துவிட்டு மாலை வீட்டிற்குத் திரும்பிய பெற்றோர் விஷ்ணு பிரியா படுக்கையறையில் கழுத்து துண்டான நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காதலிக்க மறுத்ததால் கொலை செய்தேன்
இது குறித்து பானூர் காவல் நிலையத்திற்குத் பெற்றோர் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஷ்ணு பிரியாவின் உடலை கைப்பற்றி பரியாரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், விஷ்ணு பிரியாவிற்கு 18 இடங்களில் பலமான வெட்டு காயம் இருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில்,
கூத்துபறம்பு மானந்தேரி பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஷியாம்ஜித் என்பவரின் போனிலிருந்து விஷ்ணு பிரியாவின் போனுக்கு கடைசியாக அழைப்பு வந்தது தெரிய வந்தது.

ஷியாம்ஜித் விஷ்ணு பிரியாவை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால் விஷ்ணு பிரியா அவரை காதலிக்க மறுத்துள்ளார்.
போலீசார் ஷியாம்ஜித்திடம் விசாரித்ததில் அவர், விஷ்ணு பிரியா எங்கே தன்னை விட்டு போய் விடுவாரோ என்ற அச்சத்திலும் வேறு யாரையாவது காதலித்து விடுவாரோ என்ற பொறாமையிலும் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் ஷியாம்ஜித்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மோனிஷா