ஆந்திர மாநிலத்தில் புலியை கொன்று சமைத்து சாப்பிட்டதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
பிரகாசம் மாவட்டம் புல்லாலசெருவு மண்டலம் அக்கச்செருவு பஞ்சாயத்து செஞ்சுகூடம் அருகே உள்ள ஈத்தல கொண்டா, எர்ரதாரி ஆகிய பகுதிகளில் அதிகளவில் வன விலங்குகள் வந்து செல்கின்றன.
இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகள் சிலர் மின் கம்பிகளை பொருத்தி விலங்குகளை வேட்டையாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 10ம் தேதி அப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பது வனத்துறையினருக்கு தெரியவந்தது.
இதனால் அந்த பகுதியில் சென்ற வனத்துறையினர் புலிகளின் கால் தடங்களை சேகரித்தனர்.
மேலும் புலிகள் நடமாட்டத்தை கண்காணிக்க கேமிராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மின்சார கம்பியில் சிக்கி புலி ஒன்று இறந்ததாகவும், அதன் தோலை வனப்பகுதியில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு இறைச்சியை சமைத்து அப்பகுதி மக்கள் சாப்பிட்டதாகவும் அடையாளம் தெரியாத நபர்கள் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
புலியின் கறியை பங்கு போடுவதில் ஆக்கப்பள்ளம் கிராம மக்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டு இந்த விஷயம் வனத்துறையினருக்கு தெரிய வந்தது.
அக்கிராமத்திற்கு நேற்று சென்ற வனத்துறையினர் புலி மாமிசம் சாப்பிட்டவர்கள் என்று கருதப்படும் சிலரை வனத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்ல முயன்றனர்.
இதனால் கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர்கள் புலிக்கறி சாப்பிட்டதை ஒப்புக் கொண்டனர்.
இதுகுறித்து பேசிய வனச்சரகர் ஏ.நீலகண்டேஸ்வர் கிடைத்த தகவலின் அடிப்படையில் அக்காபாலம் பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
புலி நடமாட்டம் இருப்பது தெரிந்தவுடன் கால் தடங்களை சேகரித்து பார்த்ததில் இரண்டு பெண் புலிகளும் ஒரு ஆண் புலியும் அங்கு நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மின் கம்பிகள் பொருத்தப்படுவது தெரிய வந்துள்ளது. இதனால் புலிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி வனப்பகுதியில் மின்சார வசதி இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புலி கொல்லப்பட்டு சமைத்து சாப்பிட்டதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கலை.ரா
அனல் பறந்த மயில்சாமியின் விவாத மேடைகள்: ஃப்ளாஷ்பேக்!
பெண் கலெக்டருக்கு பல அதிகாரிகளுடன் தொடர்பு: கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு!