ஸ்லீப் மோடுக்கு சென்ற விக்ரம் லேண்டர்!
நிலவில் தரையிறங்கியுள்ள விக்ரம் லேண்டர் இன்று (செப்டம்பர் 4) ஸ்லீப் மோடுக்கு சென்று விட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்து நிலவில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது.
நிலவில் ஆய்வு செய்த ரோவர் நிலவின் வெப்பநிலை, ஆக்சிஜன், அதிர்வு உள்ளிட்டவற்றைக் கண்டுபிடித்திருப்பதாக இஸ்ரோ அறிவித்தது. இஸ்ரோவும் தொடர்ந்து ரோவரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வந்தது.
இதனையடுத்து கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி ரோவர் ஸ்லீப்பிங் மோடுக்கு சென்றுவிட்டதாக இஸ்ரோ அறிவித்தது. தற்போது விக்ரம் லேண்டரும் ஸ்லீப்பிங் மோடுக்கு சென்றுவிட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
https://twitter.com/isro/status/1698618694795219401?s=20
இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “விக்ரம் லேண்டர் இன்று காலை 8 மணி அளவில் ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விக்ரம் லேண்டர் உயர்த்தப்பட்டு வேறு இடத்தில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, புதிய இடத்தில் விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE, RAMBHA-LP மற்றும் ILSA ஆகியவை சோதிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட தரவு பூமியில் பெறப்பட்டது.
பேலோடுகள் இப்போது அணைக்கப்பட்டுள்ளன. லேண்டர் ரிசீவர்கள் இயக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சூரிய சக்தி தீர்ந்து பேட்டரி தீர்ந்தவுடன் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரின் அருகில் ஸ்லீப் மோடில் இருக்கும் என்று நம்புகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக விக்ரம் லேண்டரை தரையிலிருந்து எழுப்பி மீண்டும் வேறு இடத்தில் தரையிறக்கப்படுகிறதா என்றும் இஸ்ரோ சோதித்து பார்த்தது. இந்த சோதனையானது விக்ரம் லேண்டரை ஸ்லீப் மோடில் வைப்பதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து இஸ்ரோ, “விக்ரம் லேண்டர் அதன் பணி நோக்கங்களை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனையில், விக்ரம் லேண்டர் எதிர்பார்த்தபடி சுமார் 40 செமீ உயர்ந்து, 30 – 40 செ.மீ. தொலைவில் வேறொரு இடத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. அனைத்து அமைப்புகளும் சிறப்பாக செயல்படுகின்றன” என்று தெரிவித்துள்ளது.
மோனிஷா
அமைச்சர் சேகர்பாபு ஏன் பதவி விலக வேண்டும்?: உதயநிதி கேள்வி!
காவல்துறையை இரண்டாக பிரிக்க வேண்டும்: அண்ணாமலை