சண்டிகர் பல்கலைக்கழகத்தில் 60 மாணவிகளின் குளியல் வீடியோ வெளியான புகாரில் சம்மந்தப்பட்ட மாணவி, அவரது காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள சண்டிகர் தனியார் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முதலாமாண்டு படிக்கும் மாணவி ஒருவர் சக மாணவிகள் குளிக்கும் வீடியோவை ரகசிய கேமரா மூலம் எடுத்து காதலனுக்கு அனுப்பியதாக எழுந்த புகார் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 60 பெண்களின் குளியல் வீடியோக்கள் எடுக்கப்பட்டு அது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் போராட்டம் நடந்து வருகிறது.
தங்களது அந்தரங்க வீடியோ சமூக வலைதளங்களில் உலா வருவதாக செய்தியை கேட்ட சில மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்களும் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் இறங்கினர்.
இந்த விஷயத்தில் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பதாக கூறி மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர்.
ஆனால் இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எஸ்.பவா விடுத்துள்ள அறிக்கையில், “மாணவர்களின் 60 வீடியோக்கள் கண்டறியப்பட்டதாக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் வதந்தி முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது” என்று கூறினார்.
“இதுவரை எங்கள் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவரின் ஒரே ஒரு வீடியோ மட்டுமே உள்ளது என்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். வேறு யாருடைய வீடியோவையும் அவர் பதிவு செய்யவில்லை” என்றார்.
காவல்துறை தரப்பும் குற்றம் சாட்டப்பட்ட அந்தப் பெண் தனது அந்தரங்க வீடியோவை மட்டுமே சிம்லாவில் உள்ள 23 வயதான காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார். வேறு எந்த வீடியோவும் இல்லை என்று கூறியது.
ஆனால் மாணவிகளோ பல்கலைக்கழகமும், காவல்துறையும் இந்த விஷயத்தில் உண்மையை மூடி மறைப்பதாகக் குற்றம் சாட்டினர். இதையடுத்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இதுதொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிடுவதாக அறிவித்தார்.
மூத்த ஐபிஎஸ் அதிகாரியின் தலைமையில் 3 பேர் அடங்கிய மகளிர் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும், வளாகத்திற்குள் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 24 வரை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட மாணவி, சிம்லாவில் டிராவல்ஸ் ஏஜென்சியில் பணிபுரியும் அவரது காதலனான சன்னி மேத்தா, மற்றும் பேக்கரியில் பணிபுரியும் மற்றொருவர் என 3 பேரை போலீஸ் கைது செய்திருக்கிறது.
மேலும் வீடியோ விவகாரம் தெரிந்தும் மவுனம் காத்த விடுதி வார்டன் ரவிந்தர் கவுர் உள்பட 2 பேரை பல்கலைக்கழக நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்ட மாணவியின் தொலைபேசி தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் நீக்கப்பட்ட வீடியோக்களை கண்டுபிடித்து மீட்டெடுக்க முடியும்.
குளியலறையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ரகசிய கேமராக்கள் உள்ளதா என்ற சோதனையும் நடந்து வருகிறது. தடயவியல் சோதனையின் முடிவிலேயே உண்மையில் அந்த மாணவியிடம் 60 பேரின் அந்தரங்க வீடியோக்கள் இருந்ததா இல்லையா என்பது தெரியவரும்.
கலை.ரா