விக்டோரியா கெளரி நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப 8 பேரின் பெயர்களை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.
இதில் மதுரை உயர்நீதிமன்றத்தில் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக உள்ள விக்டோரியா கெளரியை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது.
இவர் பாஜக மகிளா மோர்ச்சாவின் தேசிய பொதுச்செயலாளராக இருந்துள்ளார் என்றும் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாகவும் அதனால் இவரை நீதிபதியாக நியமிக்கக்கூடாது என்று 21 வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற கொலிஜியத்திற்கும், குடியரசு தலைவருக்கும் கடிதம் அனுப்பினர்.
இந்தநிலையில் நேற்று விக்டோரியா கெளரி உள்பட ஐந்து பேரை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நியமித்தார்.
விக்டோரியா கெளரி நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இன்று காலை 10.35 மணியளவில் விக்டோரியா கெளரி நீதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில், அவரை நீதிபதியாக நியமிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று காலை 10.30 மணியளவில் நீதிபதிகள் சஞ்சய் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு வர உள்ளது.
செல்வம்
துருக்கி நிலநடுக்கம்: 4 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை – கலங்கிய தமிழக முதல்வர்
இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் கடைசி நாள்!