தமிழ்நாட்டில் நான் ஆளுநராக இருந்தபோது, துணைவேந்தர் பதவி 40-50 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
கடந்த 2017 முதல் 2021ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி வரை தமிழகத்தின் 14 வது ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பணியாற்றினார்.
அப்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதை தொடர்ந்து கடந்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
பகவந்த் மான் – பன்வாரி லால் மோதல்!
இந்நிலையில் பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், ஆளுநர் பன்வாரிலாலுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான சத்பீர் சிங் நியமனத்தை சட்டவிரோதமானது என்று கூறிய ஆளுநர் பன்வாரிலால், மேலும் தாமதிக்காமல் அவரை உடனடியாக நீக்கக் கோரி முதல்வர் பகவந்த் மானுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அரசியலமைப்பின் படி ஆளுநர் செயல்பட வேண்டும்!
இதற்கு ஆம் ஆத்மி அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய மாநில நிதியமைச்சர் எச்.எஸ்.சீமா, “பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சியை ஆட்சிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். எங்கள் பணியை ஆளுநர் தடுக்கக் கூடாது.
பாஜகவுக்காக பணியாற்றாமல், அரசியலமைப்புச் சட்டத்தின் பொறுப்புகளை நிறைவேற்றுமாறு ஆளுநரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
பஞ்சாப் அரசு தன்னிடம் கற்றுக்கொள்ள வேண்டும்!
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் பன்வாரி லால், பஞ்சாப் அரசை கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறுகையில், பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு எவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்பதை தன்னிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கல்வியை மேம்படுத்துவதில் தான் மிகுந்த அக்கறை காட்டி வருகிறேன்.
பல்கலைக்கழகங்களின் பணிகளில் ஆளுநர் தலையிடுவதாக பஞ்சாப் அரசு கூறுகிறது. முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஒரு வேந்தராக ஆளுநரிடம் உள்ளது. உண்மையில், பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது” என்று கூறினார்.
40-50 கோடிகளில் துணைவேந்தர் பதவி!
ஆனால் அதோடு நிற்காமல், தமிழகத்தில் ஆளுநராக இருந்தபோது நேர்ந்த அனுபவங்களையும் பன்வாரி லால் குறிப்பிட்டார்.
அவர், ”தமிழகத்தில் நான்கு ஆண்டுகள் நான் ஆளுநராக பணியாற்றிய அனுபவம் மிக மோசமானதாக இருந்தது. அங்கு துணைவேந்தர் பதவி 40-50 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது என்ற அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அதேநேரத்தில் தமிழகத்தின் ஆளுநராக இருந்தபோது சட்டப்படி தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு 27 துணைவேந்தர்களை நியமித்தேன்.” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் : மாற்று வழி என்ன?
புதிய சாதனை படைத்த விஜய்யின் அரபிக் குத்து!