ஞானவாபி மசூதியின் ஒரு பகுதியில் இந்துக்கள் பூஜை செய்ய வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அயோத்தி பாபர் மசூதி போலவே, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருக்கும் ஞானவாபி மசூதியும் சர்ச்சையில் சிக்கியது.
காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதி, கோவிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்று இந்துக்கள் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த மசூதியின் அடித்தளத்தில், ‘தெஹ்கானாக்கள்’ எனப்படும் 4 பாதாள அறைகள் உள்ளன. அவற்றில் ஒரு அறை, வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த வியாஸ் குடும்பத்தினரிடம் வசம் இன்னும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
வாரணாசியைச் சேர்ந்த ஷைலேந்திர குமார் பதக் வியாஸ், மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்,
அவரது மனுவில் “1993 வரை மசூதியின் அடித்தளத்தில் இந்து மத பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. மாநில அரசின் உத்தரவை தொடர்ந்து இந்த பூஜைகள் நிறுத்தப்பட்டன.
மீண்டும் இங்குப் பூஜை நடத்த அனுமதிக்க வேண்டும்” என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்று இந்துக்கள் தரப்பில் பல்வேறு மனுக்கள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்கில் இன்று (ஜனவரி 31) உத்தரவு பிறப்பித்த வாரணாசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ்,
ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதி பாதாள அறையில் இந்துக்கள் பூஜை நடத்த அனுமதி வழங்கியுள்ளார்.
இந்து மத பூஜைகளை 7 நாட்களில் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்கவும் காசிவிஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என மசூதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், வாரணாசியின் ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்திய இந்தியத் தொல்லியல் துறை, அங்கு மசூதி கட்டுவதற்கு முன்னதாக கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா