பிரதமர் மோடியால் கடந்த நவம்பர் 11ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்ட சென்னை-மைசூரு வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
நாட்டின் 75ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், அடுத்த ஆண்டு(2023) ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, நவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலை இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. முக்கியமாக, வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் ஏற்கெனவே டெல்லி-வாரணாசி, டெல்லி-ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி காத்ரா, குஜராத் – மகாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம்-டெல்லி, சென்னை – மைசூரு என ஐந்து வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஒருபுறம் வந்தே பாரத் ரயில் சேவை, மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்க, மறுபுறம் அது விபத்தில் சிக்குவதும் கேள்விக்குறியாகி வருகிறது.
குஜராத்-மகாராஷ்டிரா இடையே இயக்கப்பட்ட 3வது வந்தே பாரத் ரயில், கடந்த அக்டோபர் 6ம் தேதி எருமை மாடுகளால் விபத்துக்குள்ளானது. இதில் 4எருமை மாடுகள் உயிரிழந்தன.

ரயிலின் கூம்பு வடிவ முகப்புப் பகுதியில் சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து, அதே ரயில் அதற்கடுத்த நாளும், அதாவது அக்டோபர் 7ம் தேதியும் விபத்துக்குள்ளானது. அன்று, அந்த ரயிலில் பசுமாடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
அதுபோல், கடந்த அக்டோபர் 8ம் தேதி டெல்லியில் இருந்து வாரணாசி இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் சக்கரம் திடீரென ‘ஜாம்’ ஆனது. அந்த ரயிலின் C8 பெட்டியின் சக்கரம் பழுதடைந்ததால், ரயில் நகர்வதில் பிரச்சனை ஏற்பட்டது.
இதனால், பயணிகள் 5மணி நேரம் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் வந்தே பாரத் ரயில்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் விபத்துக்குள்ளாகி சேதமடைந்தது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 29ம் தேதி மீண்டும் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளானது. அன்றைய தினம் மாடுகள் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது.

வந்தே பாரத் ரயில் விபத்துகள் குறித்து, விபத்தில் ஹாட்ரிக் அடித்த ’வந்தே பாரத்’ ரயில், வந்தே பாரத் ரயில்: ஒரே மாதத்தில் 4வது முறையாக விபத்து என்கிற தலைப்புகளில் நாம் தொடர்ந்து மின்னம்பலத்தில் கட்டுரை வெளியிட்டு வருகிறோம்.
இந்த நிலையில், நேற்று(நவம்பர் 17) இரவு மைசூரில் இருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் விரைவு ரயில் அரக்கோணம் சந்திப்பு அருகே கன்றுக்குட்டி மீது மோதியதில் ரயிலின் முன்பக்கம் சேதமடைந்தது.
ரயிலில் அடிப்பட்டு கிடந்த கன்றுக்குட்டியை ஊழியர்கள் அகற்றிய பிறகு, ரயில் மீண்டும் சென்னை நோக்கி இயக்கப்பட்டது.
இந்த ரயிலைத்தான், கடந்த நவம்பர் 11ஆம் தேதி பிரதமர் மோடி பெங்களூருவில் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது, நாட்டின் 5வது வந்தே பாரத் ரயில் ஆகும்.
ஜெ.பிரகாஷ்
டிஜிட்டல் திண்ணை: அரசின் நியமனங்கள்- திமுக நிர்வாகிகள் குமுறல்!
முதல்வர் குறித்து விமர்சனம்: கிஷோர் கே.சாமி முன்ஜாமீன் மனு தள்ளுபடி!