வாஜ்பாய் நினைவு தினம் : குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை!

Published On:

| By Kavi

Vajpayee on 5th death anniversary President Prime Minister tribute

முன்னாள் பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான வாஜ்பாய், 1924ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்தார்.

1942ஆம் ஆண்டு தன்னுடைய அரசியல் பயணத்தை ஆரம்பித்த வாஜ்பாய், 1957ஆம் ஆண்டு முதல்முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 10 முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.

மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்த அவர், ஐந்து ஆண்டுகள் முழுமையாகப் பதவியிலிருந்த காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.

இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாய் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி மாலை காலமானார்.

இன்று அவரது 5ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

வாஜ்பாய் நினைவிடத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதா கவுல் பட்டாச்சார்யாவும் நினைவிடத்துக்கு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

வாய்பாய் நினைவுநாளில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “140 கோடி இந்திய மக்களுடன் இணைந்து அடல்ஜிக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது தலைமையால் இந்தியா பெரிதும் பயனடைந்தது. தேசத்தின் முன்னேற்றத்தை உயர்த்துவதிலும், அதை 21ஆம் நூற்றாண்டுக்கு பல்வேறு துறைகளில் கொண்டு செல்வதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார்” என்று நினைவு கூர்ந்துள்ளார்.

பிரியா

விமர்சிப்பது எளிது: முன்னாள் வீரருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்

சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் விபத்து: 3 பேர் பலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel