தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த ஊரில் இருந்த 126 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம் அகற்றப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள வடகன்னிகாபுரம் என்ற சிறிய ஊரின் அருகிலுள்ள நெல்லிப்பிள்ளை என்ற கிராமத்தை சேர்ந்தவர்தான் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 1898 ஆம் ஆண்டு வட கன்னிகாபுரத்தில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. 126 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த ரயில் நிலையம் பாலக்காடு டிவிஷனுக்கு உட்பட்டது.
2008 ஆம் ஆண்டு வரை மீட்டர் கேஜ் பாதையாக இருந்தது. இதில் பாலக்காடு – பொள்ளாச்சி ரயில் இயக்கப்பட்டு வந்தது. தினசரி 6 ரயில்கள் இந்த பாதையில் இயக்கப்பட்டன. இவை வடகன்னிகாபுரம் ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும்.
பின்னர், 2015 ஆம் ஆண்டு அகல ரயில்பாதையாக மாற்றப்பட்ட பிறகு, திருச்செந்தூர் பாலக்காடு இடையே ஓடும் ரயில் இங்கு நின்று சென்றது. தற்போது, பயணிகள் வரத்து குறைந்து போனதால், இந்த ரயில் நிலையம் அகற்றப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரயில் நிலையத்தில் இருந்த பெயர் பலகை நீக்கப்பட்டது.
மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற இயற் பெயர் கொண்ட எம்.ஜி.ஆரின் தந்தை மருதூர் கோபால மேனனுக்கு சொந்த ஊர் பாலக்காடு மாவட்டம் நெல்லப்பிள்ளி கிராமம் ஆகும். தாயார் சத்யபாமாவுக்கு வடவன்னூர். இந்த இரு ஊர்களுக்குமே வடகன்னிகாபுரம் ரயில் நிலையம்தான் பொதுவானது.
வடவன்னூரில் கோபால மேனனின் மூதாதையர் வீட்டுக்கு அருகில் எம்.ஜி.ஆருக்குக் கிராமப் பஞ்சாயத்து சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில், ஒரு சமுதாயக் கூடமும் உள்ளது. அதோடு, எம்.ஜி.ஆர் நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், திரைப்படங்களின் விவரங்கள் உள்ளிட்டவவை இந்த நினைவிடத்தில் இடம் பெற்றுள்ளன. எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தபோது வடவன்னூர் கிராமத்திற்கு பலமுறை வந்து சென்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்