மல்யுத்த வீரர்கள் மீதான தாக்குதல் மற்றும் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்காததை அடுத்து உலக மல்யுத்த கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருப்பவர் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் சிறுமி உட்பட மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கடந்த ஜனவரி மாதத்தை தொடர்ந்து மீண்டும் ஏப்ரல் 23ஆம் தேதி முதல் ஒரு மாதத்துக்கும் மேலாக மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையே உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது போக்சோ உள்பட 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனாலும் அவர் மீது கைது நடவடிக்கை இல்லை.
வீரர்கள் மீது தாக்குதல்.. கைது!
இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி நீதி கேட்டு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த 28 ம் தேதி பேரணியாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத் மற்றும் பஜ்ரங் பூனியா உள்ளிட்டவர்களை தரதரெவென இழுத்து சென்று கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் அத்துமீறி போராட்டம் நடத்தியதற்காக, ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் இனி போராட அனுமதியில்லை என்று டெல்லி காவல்துறை அறிவித்தது.
ஹரித்வார் வந்த வீரர்கள்
அதன் தொடர்ச்சியாக நேற்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நாட்டுக்காக தாங்கள் வென்ற பதக்கங்களை ஹரித்வார் கங்கை ஆற்றில் வீசி எதிர்ப்பை காட்ட முயன்றனர்.
அப்போது குறுக்கிட்ட விவசாய சங்க தலைவர் நரேஷ் தியாகத், வீரர்களிடம் பதக்கங்களை பெற்று, 5 நாட்கள் பொறுத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று வீரர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
45 நாட்கள் கெடு
இந்நிலையில் தான் உலக மல்யுத்த கூட்டமைப்பு இந்த விவகாரத்தில் தலையிட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த கூட்டமைப்பு நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த சில மாதங்களாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இந்தியாவில் மல்யுத்த வீரர்கள் போராடும் சூழ்நிலையை மிகுந்த கவலையுடன் உலக மல்யுத்த கூட்டமைப்பு கவனித்து வருகிறது.
மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணி செல்ல முன்னெடுத்ததற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது மற்றும் ஒரு மாதத்துக்கும் மேலாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட இடமும் அதிகாரிகளால் அகற்றப்பட்டது. இந்த செயல்களுக்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவிக்கிறது.
முதலிலேயே பிரச்சனைக்கு தீர்வு கண்டு இருந்தால் இந்த நிலை வந்திருக்காது. குற்றஞ்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் மீது தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறது. குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துமாறு உலக மல்யுத்த கூட்டமப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துகிறது.
மேலும் இந்த பிரச்சனையின் தொடக்கத்தில் இருந்து ஏற்கனவே செய்ததை போல் உலக மல்யுத்த கூட்டமைப்பு மல்யுத்த வீரர்களுடன் சந்திப்பை நடத்தி அவர்களின் பிரச்சனையை கேட்டறிந்து பாதுகாப்பு பற்றியும் ஆலோசனை நடத்தும். அதோடு மல்யுத்த வீரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
இறுதியாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு (ஐஓஏ) மற்றும் இந்திய மல்யுத்த சம்மேளனம் ஆகியவற்றின் ஒக் கமிட்டியிடம் இருந்து அடுத்த பொது கூட்டமைப்பு தேர்வு குறித்து உலக மல்யுத்த கூட்டமைப்பு கூடுதல் தகவல்கள் கோரும். இதற்கு 45 நாள் கெடு வழங்கப்படும்.
அவ்வாறு செய்யத் தவறினால், உலக மல்யுத்த கூட்டமைப்பு, இந்திய மல்யுத்த சம்மேளத்தை சஸ்பெண்ட் செய்யும். இதனால் விளையாட்டு வீரர்கள் எந்த நாட்டையும் சாராத நடுநிலைக் கொடியின் கீழ் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இந்த விஷயத்தில் ஏற்கனவே உலக மல்யுத்த கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனவரி மாதம் வீரர்கள் போராட்டம் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற இருந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான இடம் மாற்றப்பட்டது. இது நினைவூட்டப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.”
இதுவரை சர்வதேச அரங்கில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து அதிகம் பேசப்படாத நிலையில், உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்ததுள்ளது மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
மல்யுத்த வீரர்கள் போராட்டம்: தெறித்து ஓடிய மத்திய அமைச்சர்!
மல்யுத்த வீரர்கள் போராட்டம்: பிரிஜ் பூஷன் சொல்வது என்ன?