பாசக்கயிறாக மாறும் மாஞ்சா கயிறு: குஜராத்தில் சோகம்!

இந்தியா

இந்தியாவில் மாஞ்சா நூலால் உயிரிழப்பு ஏற்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது.

கண்ணாடித் துகள்களால் மாஞ்சா நூல் தயாரிக்கப்படுகிறது. கண்ணுக்கே தெரியாத இந்த நூல் பட்டம் விடும்போது அறுந்து விழுந்து பாதிக்கப்பட்டவர்கள், மரணமடைந்தவர்கள் ஏராளம்.

2006ல் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கோதண்டராமன், மாஞ்சா நூல் கழுத்து அறுத்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அப்போது இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டதோடு கண்ணாடி துகள்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

2007ல் வடசென்னையில் மாஞ்சா நூல் அறுத்து தனது தந்தையுடன் சென்று கொண்டிருந்த 2 வயது குழந்தை துடிதுடித்து உயிரிழந்தது.

2010 ஜூலையில் வியாசர்பாடி பெட்ரோல் பங்க் அருகே கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை பைக்கில் சென்றுகொண்டிருக்கும் போது திருப்பதி என்பவர் மாஞ்சா நூல் கழுத்தறுத்து உயிரிழந்தார்.

2011ல் தனது தந்தையுடன் மகிழ்ச்சியாகக் கடற்கரைக்குச் சென்று கொண்டிருந்த ஷெரீன் பானு என்ற எல்.கே.ஜி படித்து வந்த குழந்தை மாஞ்சா நூல் மாட்டி தந்தையின் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது.

2012ல் அரும்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார், தண்டையார்பேட்டை வைத்தியநாதன் ஆகிய இருவர் இருவேறு இடங்களில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து உயிரிழந்தனர்.

2013ல் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மந்தைவெளியை சேர்ந்த ஜெயகாந்தன் தனது மனைவி குழந்தையுடன் மாமனார் வீட்டுக்குச் செல்லும் போது மாஞ்சா நூல் கழுத்தறுத்து உயிரிழந்தார்.

2015ஆம் ஆண்டு தனது அப்பா அம்மாவுடன் பைக்கில் பெரம்பூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது அஜய் என்ற சிறுவன் மாஞ்சா நூல் கழுத்தறுத்து சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தான்.

2017ல் கொளத்தூரைச் சேர்ந்த சிவபிரகாசம் மாஞ்சா நூல் சிக்கி உயிரிழந்தார்.

2019ல் ஏழுகிணறு கிருஷ்ணப்ப குளத்தெருவை சேர்ந்த அபிநவ் ஷராப்(3) என்ற குழந்தை தனது தந்தையுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது மாஞ்சா நூல் மாட்டி உயிரிழந்தது.

தமிழக அரசு மாஞ்சா நூலுக்கு தடை விதித்திருந்த போதிலும், அதை பொருட்படுத்தாமல் சிலர் விளையாடியதன் விளைவு இவ்வாறு பல குழந்தைகள் ரத்தம் சிந்தியதோடு மரணிக்கவும் நேரிட்டது.

எனினும் மாஞ்சா நூலால் பட்டம் விடுவது குறைந்தபாடில்லை என்பதோடு, 2020 ஊரடங்கு காலத்தில் மாஞ்சா நூல் பயன்பாடு அதிகரித்தது.

அப்போது சென்னை போலீசார் மாஞ்சா நூல் விற்பனை செய்யப்படுகிறதா, யாரேனும் பயன்படுத்துகிறார்களா என தொடர் சோதனையில் ஈடுபட்டு கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அதோடு, மாஞ்சா நூல் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்தனர்.

Uttarayan kite flying festival

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து நேரடியாக கடைகளில் கண்ணாடி துகள்களால் உருவாகும் மாஞ்சா கயிறு விற்கப்படுவது இல்லை என்றாலும் ஆன்லைனில் கிடைக்கிறது.

கடந்த 2022அக்டோபர் மாதம் அண்ணா நகரைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரை ஆன்லைனில் மாஞ்சா நூல் விற்றதற்காக கைது செய்தனர்.

எனவே முற்றிலுமாக மாஞ்சா நூலுக்கு தடை விதித்து வாகன ஓட்டிகளின், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வரும் நிலையில் குஜராத்தில் ஒரே நாளில் மாஞ்சா கயிறுக்கு 6 பேர் பலியாகியிருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் உத்ராயண் என்ற பெயரில் அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகையில் குஜராத் மக்கள் ஒன்று கூடி பட்டம் விட்டு விளையாடி மகிழ்வர். அப்படி இந்த ஆண்டு நடைபெற்ற விளையாட்டு சோகத்தில் முடிந்திருக்கிறது.

கடந்த வார இறுதியில் நடந்த இந்த விளையாட்டின் போது 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். 170 பேர் காயமடைந்தனர்.

உத்ராயண் திருவிழாவை முன்னிட்டு மற்றவர்கள் விடும் பட்டத்தைக் காட்டிலும் உயரப் பறக்க வேண்டும் என்பதற்காக மாஞ்சா கயிறை பயன்படுத்தியதன் விளைவே இத்தனை பேரின் உயிர் போனதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

கீர்த்தி என்கிற இரண்டு வயது சிறுமி தனது தந்தையுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது கழுத்தில் மாஞ்சா கயிறு அறுத்து உயிரிழந்ததாக போர்டலாவ் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

மற்றொரு 3 வயது சிறுமி விஸ்நகர் நகரில் தனது தாயுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது மாஞ்சா கயிறு அறுத்து உயிரிழந்துள்ளார்.

ரிஷப் வர்மா என்ற ஏழு வயது சிறுவன் தனது பெற்றோருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, ராஜ்கோட் பகுதியில் மாஞ்சா கயிறு கழுத்தறுத்துள்ளது. இதனால் அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

இந்தசூழலில் உயிரைப் பறிக்கும் சீனாவின் மாஞ்சாக் கயிறை பயன்படுத்த வேண்டாம் என்று குஜராத் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மாஞ்சா கயிறு பயன்பாட்டிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும் ஆர்வலர் ஜெயேஷ் ஷிண்டே கூறுகையில், “அரசின் அலட்சியப் போக்குக்கு மக்கள் விலையைக் கொடுக்கின்றனர்.

மாஞ்சா கயிற்றுக்குத் தடை விதித்து அதை அரசு கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். திருவிழாவின் போது உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பொழுதுபோக்குக்காக விளையாடப்படும் பட்டம் விடுதல் விளையாட்டு மாஞ்சா கயிறால் மரண விளையாட்டாக மாறியிருக்கிறது. சென்னையாக இருந்தாலும் சரி, குஜராத்தாக இருந்தாலும் சரி மாஞ்சா கயிறின் பயன்பாட்டை முற்றிலுமாக தடுத்தால் மட்டுமே இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.

பிரியா

பனிக்கடலாக மாறிய கொடைக்கானல்

படைப்பாளிகள் பிறந்தநாளில் தள்ளுபடி: அசத்தும் நகைக்கடை உரிமையாளர்!

குடியரசு தினவிழா: தலைமைச் செயலாளர் போட்ட உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *