உத்தரகாசியில் சுரங்கத் தொழிலாளர்கள் மீட்புப் பணியின் வெற்றி ஒட்டுமொத்த நாட்டையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி சுரங்கத்திற்குள் சிக்கி கடந்த 17 நாட்களாக மரணப் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது.
இதனையடுத்து கடந்த 17 நாட்களிலும் மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
பிரதமர் மோடி தற்போது வெளியிட்டுள்ள செய்தியில், “உத்தரகாசியில் நமது தொழிலாளர் சகோதரர்களின் மீட்புப் பணியின் வெற்றி ஒட்டுமொத்த நாட்டையும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
சுரங்கப்பாதையில் சிக்கித் தவித்த நண்பர்களின் தைரியமும் பொறுமையும் எல்லோருக்கும் உத்வேகம் அளிக்கிறது என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகிறேன்.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இந்த நண்பர்கள் இப்போது தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திப்பார்கள் என்பது மிகவும் திருப்திகரமான விஷயம். இந்த சவாலான நேரத்தில் இந்தக் குடும்பங்கள் காட்டும் பொறுமையும் தைரியமும் பாராட்ட வார்த்தைகள் கிடையாது.
இந்த மீட்பு நடவடிக்கையில் தொடர்புடைய அனைத்து மக்களையும் நான் வணங்குகிறேன். அவர்களது துணிச்சலும் உறுதியும் நமது தொழிலாளர் சகோதரர்களுக்கு புது வாழ்வு அளித்துள்ளது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் மனிதநேயம் மற்றும் குழுப் பணிக்கு ஒரு அற்புதமான உதாரணத்தை அமைத்துள்ளனர்.” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
லோகேஷின் “G squad” தயாரிப்பில் முதல் படம்… இயக்குனர் யார் தெரியுமா?
உத்தரகாண்ட்: 17 நாள் போராட்டத்திற்கு பிறகு தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு!