உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்!

Published On:

| By Selvam

உத்தர்காஷியில் சார் தாம் சுரங்க கட்டுமானப் பணியின் போது நடந்த விபத்தில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தீபாவளி அன்று காலை நடந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி பல மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரியில் சில்க்யாரா மற்றும் போல்கோவன் கிராமங்களை இணைக்கும் வகையில் சார் தாம் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இருபுறமும் இருந்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மொத்தம் 4.5 கிலோமீட்டர் தூரத்திற்கு இரட்டை வழித்தடங்களாக அமைக்கப்பட்டு வரும் இந்த சுரங்கப்பாதை பணிகள் இரு புறம் இருந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சுரங்கப்பாதை உத்தர்காஷி முதல் யமுனோத்ரி வரையிலான 26 கிலோமீட்டர் தூரம் குறைக்கப்பட்டு மக்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் அமையப்பெற்று வருகிறது.

இந்த சுரங்க பாதையில் இருந்து செல்லும் சாலைகள் கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரினாத், கேதர்நாத் ஆகிய இமயமலையில் உள்ள புனித தலங்களை இணைக்கின்றன.

சுரங்கப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் தீபாவளி தினமான நேற்று காலை சில்க்யாரா பகுதியில் ஏற்பட்ட விபத்தில் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சுரங்கப் பாதையை மூடிக் கொண்டுள்ளது. நுழைவு வாயிலில் இருந்து 270 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சுரங்கத்தின் 30 மீட்டர் நீளப் பாதை உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

உள்ளே வேலை செய்து கொண்டிருந்த 40 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், இந்தோ – திபெத் எல்லை போலீசார், எல்லையோர சாலைகள் அமைப்பினர் என 150க்கும் மேற்பட்டோர் , 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை உயிரிழப்புகள் எதுவும் அறியப்படாத நிலையில் தொடர்ந்து தொழிலாளர்களை மீட்க போராடி வருகின்றனர். மேலும் சுரங்கத்தின் உள்ளே தொழிலாளர்கள் மூச்சு விடும் வகையில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. பைப்கள் மூலம் குடிநீர் விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது.

உத்தர்காஷி மாவட்ட மேஜிஸ்டிரேட் அபிஷேக் ருஹேலா ,”மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ட்ரில்லிங் இயந்திரங்கள் முழு வீச்சில் வேலை செய்து கொண்டிருக்கின்றன. பாதுகாப்பாக வெளியேறும் வகையில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் வழியே தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்படுவர் ,”என்று கூறியுள்ளார்.

உத்தர்காஷி சர்க்கிள் ஆபிசர் பிரசாந்த் குமார் பேசுகையில், “சுரங்கத்தின் உள்ளே இருக்கும் தொழிலாளர்கள் உடன் தொடர்பை ஏற்படுத்தி விட்டோம். 15 மீட்டர் தூரத்திற்கு முன்னே நகர்ந்துள்ளோம். இன்னும் 35 மீட்டர் உள்ளே செல்ல வேண்டியிருக்கிறது. அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். விரைவில் மீட்டு விடுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ,” மீட்பு பணியும் குப்பைகளை அகற்றும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. சுரங்க பாதைக்குள் சிக்கி உள்ளோருக்கு உணவுப் பொருள்கள் உள்ளே அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த விபத்து குறித்து நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருகிறோம். விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. உள்ளே சிக்கிக் கொண்டிருக்கும் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய முன்னுரிமையாக உள்ளது. விரைவில் அவர்களை பத்திரமாக மீட்டு விடலாம்” என்று கூறியுள்ளார்.

பாஜக ஆட்சி செய்துவரும் மாநிலங்களில் நடைபெறும் கட்டுமான பணிகள் மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில் உத்தரகாண்டில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து மீண்டும் மக்களிடையே அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

சண்முக பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

திருச்செந்தூர் முருகன் கோவில் தரிசன கட்டணம் உயர்வு!

சென்னையில் அதிக காற்று மாசுபாடு… நாளை விடுமுறையா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel