கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் ரஷ்யா – உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவ அதிநவீன ‘அட்டாக்கம்ஸ்’ தொலைதூர ஏவுகணைகளை அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று ஜோ பைடனைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது போருக்கான ஆயுதங்களைக் கோரியிருந்தார். அந்தப் பேச்சுவார்த்தையின்போது, அதிநவீன அட்டாக்கம்ஸ் (ஆர்மி டாக்டிகல் மிஸைல் சிஸ்டம்) ஏவுகணைகளை வழங்க பைடன் ஒப்புக்கொண்டுள்ளார்.
190 கி.மீ வரை சென்று துல்லியத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகளைக் கொண்டு, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் உக்ரைனால் எளிதில் தாக்குவதற்கு முடியும் என்றும் அடுத்த சில வாரங்களில் இந்த ஏவுகணைகள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிகிறது.
முன்னதாக, பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடனும், ஜெலன்ஸ்கியும், ரஷ்யாவுடனான போரில் பயன்படுத்துவதற்காக உக்ரைனுக்கு அமெரிக்கா கூடுதலாக 32.5 கோடி டாலர் (சுமார் ரூ.27,000 கோடி) மதிப்பிலான ராணுவ தளவாட உதவிகளை அளிக்க இருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் அட்டாக்கம்ஸ் ஏவுகணை குறித்து அவர்கள் வெளிப்படையாக பேசுவதைத் தவிர்த்தனர்.
இதற்கிடையே, உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பவிருக்கும் அட்டாக்கம்ஸ் ஏவுகணைகளில் சாதாரண ஒற்றை வெடிகுண்டுகளுக்குப் பதிலாக, ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கி அழிக்கும் கொத்தணி குண்டுகள் பொருத்தப்பட்டிருக்கும் என்று ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
ராஜ்
சென்னை – திருப்பதி ரயில் சேவை நாளை முதல் ரத்து!
கிச்சன் கீர்த்தனா: பீட்ரூட் சூப்