அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தான் விலகுவதாக தற்போதைய அதிபரும், ஜனநாயாக கட்சி வேட்பாளருமான ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
மேலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபரான கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அறிவிப்பதற்கு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை தொடர்ந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயாக நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
இதனையடுத்து கடந்த சில மாதங்களாகவே குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் 81 வயதான ஜோ பைடனின் செயல்திறன் மற்றும் மனநிலை உள்ளிட்டவற்றை விமர்சித்து சொந்தக் கட்சியினரே அவரை போட்டியில் இருந்து விலகுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தான் விலகுவதாக நேற்று (ஜூலை 21) இரவு ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
ஜோ பைடன் கூறியது என்ன?
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். மீதமுள்ள எனது பதவிக்காலத்தில் எனது கடமைகளைச் செய்வதில் எனது முழு ஆற்றலையும் செலுத்த முடிவு செய்துள்ளேன்.
2020- ஆம் ஆண்டில் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸை துணைத் தலைவராக தேர்ந்தெடுத்ததே எனது முதல் முடிவு. என்னுடைய இந்த முடிவு சிறப்பானது.
“இன்று நான் கமலா ஹாரிஸை எங்கள் கட்சியின் வேட்பாளராக முழுமையாக ஆமோதிக்கிறேன். ஜனநாயக கட்சியினர் ஒன்றுபட்டு டிரம்பை தோற்கடிக்க வேண்டிய நேரம் இது.” என்று ஜோ பைடன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜோ பைடனின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள கமலா ஹாரிஸ், தான் பெருமைப்படுத்தப் பட்டிருப்பதாகவும், அதிபர் வேட்பாளராவதற்கான அனைத்தையும் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார்.
வேட்பாளராக அறிவிக்க ஒருமாதம்?
கமலா ஹாரிஸுக்கு ஜோ பைடன் ஆதரவு தெரிவித்திருந்தாலும், அவர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக உடனடியாக அறிவிக்கப்படுவதில் சில சிக்கல்கள் உள்ளன.
அதாவது ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதில் தான் அதிபர் வேட்பாளர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்கள் முறைப்படி அறிவிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
அதே வேளையில் தற்போதைய நிலவரப்படி குடியரசுக்கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் தேர்தல் களத்தில் முன்னிலையில் உள்ளதால், அதிபர் வேட்பாளர் தேர்வில் விரைந்து முடிவெடுக்க வேண்டிய நிலை ஜனநாயக கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
இன்னும் ஒரு மாதத்துக்கு தக்காளி விலை குறையாது: என்ன காரணம்?
அரசியலமைப்பு சட்டத்தைக் கொல்வது என்றால் என்ன?