அமெரிக்கா விமான விபத்தில் 67 பேரும் உயிரிழந்ததாக நம்பப்படும் நிலையில், இன்று (ஜனவரி 31) விமானத்தின் ஒரு கருப்புப்பெட்டி மீட்கப்பட்டுள்ளது. us plane crash black box found
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் இருந்து வாஷிங்டன் டி.சி ரீகன் தேசிய விமான நிலையம் நோக்கி 64 பேருடன் நேற்று அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.
இந்திய நேரப்படி நேற்று காலை 7.30 மணியளவில் விமானம் ஓடுபாதையை நெருங்கிய நேரத்தில், அதற்கு நேர் எதிராக 3 பேருடன் வந்த அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் மோதி வெடித்தது. இரண்டும் போடோமேக் நதியில் விழுந்தன.
இதனையடுத்து நீரில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் வாஷிங்டன் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை அதிகாரிகள் இறங்கினர். ஆனால் விமானமும், ஹெலிகாப்டரும் வெடித்து சிதறியதில் ஆற்றுக்குள் மூழ்கியதில் அதில் பயணித்த 67 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை வரை 40 உயிரிழந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனமான சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

விமான விபத்திற்கான காரணத்தை அறியும் முயற்சியில் கருப்புப்பெட்டியை மீட்புப்படையினர் தேடி வந்த நிலையில், அமெரிக்க விமானத்தில் இருந்த இரண்டு கருப்புப் பெட்டிகளில் ஒன்று மீட்கப்பட்டதாக வாஷிங்டன் செனட்டர் மரியா கான்ட்வெல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், “விமான விபத்திற்கு முன்னாள் அதிபர்களான ஒபாமா மற்றும் ஜோ பைடனே காரணம். அவர்களின் கட்சி கொள்கையால் நியமிக்கப்பட்ட சாதாரண ஊழியர்களால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது” என குற்றசாட்டினார். அவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.