ஒரு மணி நேரம் பறக்க 25 லட்சம் : ராணுவ விமானத்தை அனுமதிக்காத கொலம்பியா; பம்மிய இந்தியா!

Published On:

| By Kumaresan M

அமெரிக்காவில் டிரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும் சட்டவிரோதமாக குடியேறிவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

முதல் கட்டமாக 205 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு கலிபோர்னியாவில் சான் ஆண்டனியோ நகரில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு சி 17 ராணுவ விமானம் வந்தடைந்தது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த ராணுவ விமானம் பயன்படுத்துவது இதுவே முதன் முறை. ராணுவ விமானங்கள் பறக்க வைப்பது மிகவும் செலவு பிடிக்கும் விஷயம் ஆகும். எனினும், இந்த விமானங்களை பயன்படுத்துவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இருந்து அமெரிக்கா செல்ல 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் செலவாகும். ஆனால், சி 17 விமானத்தில் பயணிக்க ஒருவருக்கு 4 லட்சம் செலவாகும். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலேயே முதல் வகுப்பு டிக்கெட் இந்தியாவுக்கு 74 ஆயிரம்தான். அதே வேளையில், சி17 விமானத்தை ஒரு மணி நேரம் இயக்கவே 25 லட்சம் செலவாகும்.

இந்த ரக விமானங்களை கொண்டுதான் கவுதமாலா, ஈகுவடார், பெரு, ஹோண்டுராஸ் நாடுகளுக்கு சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்கா அனுப்பி வருகிறது. ஆனால், கொலம்பியா மட்டும் அமெரிக்க ராணுவ விமானத்தை அனுமதிக்க மறுத்து, தன் நாட்டு விமானத்தை அனுப்பி தனது மக்களை மீட்டு கொண்டது.

டிரம்ப் அரசு அமெரிக்காவில் இருந்து சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற ராணுவ விமானங்களை பயன்படுத்துவதன் பின்னணியில் ஒரு உளவியல் ரீதியான காரணமும் இருக்கிறது. அவர்களை கை விலங்கிட்டது போல வரிசையாக ராணுவ விமானத்தில் ஏற்றியது. கிரிமினல்களை போல நடத்துவதற்கு சமமாக டிரம்ப் பார்க்கிறார். அதனால்தான், இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களை டொனால்ட் டிரம்ப், கிரிமினல்கள், ஆக்கிரமிப்பாளர்கள், ஏலியன்ஸ் என்றெல்லாம் குறிப்பிடுவது உண்டு.

லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியா கூட, அமெரிக்க ராணுவ விமானத்தை தன் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டது. ஆனால், டிரம்பின் நெருங்கிய நண்பரான மோடி பிரதமராக உள்ள இந்தியா ஏன் பணிந்து போகிறது? என்கிற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி தலைவரான பவன் கெரா தன் எக்ஸ் பக்கத்தில் . ‘இந்தியர்கள் நாடு கடத்தும் போது, கை விலங்கு போடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த காட்சியை பார்த்து ஒரு இந்தியராக அவமானப்பட்டு நிற்கிறேன்’ என்று பதிவு வெளியிட்டுள்ளார்.

ஆனால், கைவிலங்கு போட்டு இந்தியர்கள் விமானத்தில் ஏற்றப்பட்ட புகைப்படத்தையோ அதற்கான ஆதாரத்தையோ அவர் வெளியிடவில்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share