நாய்களுக்குள் சண்டை மூட்டிய நபருக்கு சிறை : நீதிமன்றம் அதிரடி!

Published On:

| By Kumaresan M

நம்ம ஊரில் கிடா சண்டை, சேவல் சண்டை நடத்துவது போல அமெரிக்காவில் நாய் சண்டை பிரபலம்.

புட் புல் ரக நாய்கள்தான் பெரும்பாலும் நாய்கள் சண்டையில் ஈடுபடுத்தப்படும். அமெரிக்காவில் இது சட்ட விரோதம் . எனினும் ஜார்ஜியா மகாணாத்தின் தலைநகர் அட்லாண்டாவை சேர்ந்த வின்செட் நாய்களுக்கிடையே சண்டை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்காக 107 புட் புல் ரக நாய்களை வளர்த்ததும் அவற்றுக்கு பயிற்சி அளித்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நாய் சண்டைகள் நடத்தியதற்காக 93 கவுண்டுகளும் அவற்றை துன்புறுத்தியதற்காக 10 கவுண்டுகள் என மொத்தம் 103 கவுண்டுகள் குற்ற கணக்காக கொள்ளப்பட்டன.

நாய்கள் சண்டை நடத்தி விவகாரத்தில் ஒரு கவுண்டுக்கு 5 ஆண்டுகள் சிறை என 465 ஆண்டுகள் தண்டனையாக அளிக்கப்பட்டது.

நாய்களை துன்புறுத்தியதற்காக, ஒரு கவுண்டுக்கு தலா ஒரு ஆண்டு என 10 ஆண்டுகளும் வின்சென்டுக்கு தண்டனையாக அளிக்கப்பட்டது.

அமெரிக்காவில் நாய் சண்டை நடத்தியதற்காக ஒருவர் 475 ஆண்டுகள் தண்டனை பெற்றது இதுவே முதன்முறை.

அமெரிக்காவில் குழிகள் தோண்டி அதற்குள் இரு நாய்களை இறக்கி விட்டு சண்டை மூட்டி விடுவர். ஏதாவது ஒரு நாய் இறந்தாலோ அல்லது சண்டை போட முடியாமல் ஓய்ந்து போனாலோதான் சண்டைகள் நிறுத்தப்படும். ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் கூட இந்த சண்டைகள் நடக்கும். அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் இது கடும் குற்ற செயலாக கருதப்படுகிறது.

வின்சென்ட் சிக்கியது எப்படி?

கடந்த 2022 ஆம் ஆண்டு அமேசான் டிரைவர் ஒருவர் வின்சென்டின் பண்ணை வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு ஏராளமான புட் புல் ரக நாய்கள் அருகருகே சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்துள்ளன. இந்த நாய்கள் ஒன்றன் மீது ஒன்று ஆக்ரோஷமாக கோபமாக காணப்பட்டுள்ளன.

அதாவது, நாய்கள் ஒன்றை ஒன்று எட்டி விட முடியாத தூரத்தில் சங்கிலியால் கட்டி விடப்பட்டிருக்கும். இரண்டும் ஒன்றுடன் ஒன்று சண்டை போட முயற்சிக்கும். ஆனால், செயினால் கட்டி வைத்திருப்பதால் அவற்றால் முடியாது. இப்படித்தான் நாய்களுக்குள் பகையை உருவாக்கி அவற்றை ஆக்ரோஷமான மன நிலையில் வைத்திருந்துள்ளார் வின்சென்ட்.

இந்த நாய்களின் நடவடிக்கையை பார்த்து, சந்தேகமடைந்த அந்த டிரைவர் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து, போலீசார் பண்ணை வீட்டை சோதித்த போது, 107 புட் புல் ரக நாய்கள் சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நாய்கள் மீட்கப்பட்டு மறு வாழ்வு மையங்களில் சேர்க்கப்பட்டன.

அமெரிக்காவில் நாய் சண்டை நடத்தி பிடிபடுபவர்கள் அதிகமாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share