அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர், மார்க் ருஃபாலோ, ஸ்கேர்லெட் உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வரும் நவம்பர் 5-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி இரு வேட்பாளர்களுக்கு இடையிலும் கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை வெளியான அனைத்து கருத்துக்கணிப்புகளும் இருவருக்கும் இடையே மெல்லிய வாக்கு வித்தியாசம் உள்ளதாக மட்டுமே குறிப்பிட்டுள்ளன.
தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் டிரம்ப் – கமலா இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்த பிரபல ஹாலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ் திரைப்பட நடிகர்கள் கமலா ஹாரிஸை ஆதரித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அவெஞ்சர்ஸ் பட நடிகர்களான ராபர்ட் டௌனி ஜூனியர் (அயர்ன் மேன்), க்றிஸ் எவன்ஸ் (கேப்டன் அமெரிக்கா), ஸ்கார்லெட் ஜோஹான்சன் (நட்டஷா), மார்க் ரஃபல்லோ (ஹல்க்), பால் பெட்டானி (விஷன்), டானாய் குரிரா (ஓகோயே), மற்றும் டான் சீடில் (வார் மெஷின்) ஆகியோர் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்தும், பொதுமக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக நடிகை ஸ்கார்லெட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 90 வினாடிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், “நாங்கள் திரும்பி வந்துவிட்டோம். ஜனநாயகத்திற்காக ஒன்று திரண்டுள்ளோம். ஒவ்வொரு வாக்கும் கமலா ஹாரிஸ் மற்றும் டிம் வால்ஸுக்கு ஆதரவாக நீல நிறமாக மாற வேண்டும். அதற்காக வாக்குப்பதிவு நாளான 5ஆம் தேதி அனைவரும் வாக்களிக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் நமக்கு தான் மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்படும்” என தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே கமலாவுக்கு ஆதரவாக பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான டெய்லர் ஸ்விஃப்ட், லியோனார்டோ டிகாப்ரியோ, டேவ் பாடிஸ்டா, ஜெனிஃபர் லாரன்ஸ், பியோனஸ், சாரா ஜெசிகா பார்க்கர், ஜெனிபர் அனிஸ்டன் ஆகிய நட்சத்திரங்கள் கமலாவுக்கு பகிரங்க ஆதரவை தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆர்.பி. உதயகுமார் மீது குவியும் புகார்!
பச்சை தண்ணீர்தான் சாம்பியனின் சாய்ஸ் … ரொனால்டோவின் ஃபிட்னெஸ் ரகசியம்!