குஜராத் கலவர குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக 2005-ல் பிரதமர் நரேந்திர மோடிக்கு விதிக்கப்பட்ட அமெரிக்கா விசா தடைகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் பேசியுள்ளார்.
கடந்த நவம்பர் 17-ஆம் தேதி சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் அந்நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதிலிருந்து அமெரிக்கா விலக்கு அளித்தது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் முதன்மை செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கூறும்போது,
“அமெரிக்கா கடந்த காலங்களிலும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு இதுபோன்று விலக்கு அளித்துள்ளது.
குறிப்பாக 1993-ல் ஹைட்டி ஜனாதிபதி ஜீன் பெர்ட்ராண்ட் அரிஸ்டைட், 2001-ல் ஜிம்பாப்வே ஜனாதிபதி ராபர்ட் முகாபே, 2014-ல் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி போன்றவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது சர்வதேச திட்டத்தின் கீழ் வெளியுறவுத்துறையால் மேற்கொள்ளப்படும் முக்கிய முடிவாகும்.” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரின் இந்த கருத்து குறித்து பிரதமர் அலுவலகத்திலிருந்து இதுவரை எந்த கருத்துக்களும் தெரிவிக்கப்படவில்லை.
2002-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி அம்மாநிலத்தில் நடந்த கலவரங்களைக் கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2005-ல் அவருக்கு அமெரிக்க அரசு விசா தடைவிதித்தது.
பின்னர் 2014-ஆம் ஆண்டு மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு விசா தடை நீக்கப்பட்டது.
சவுதி அரசையும் மன்னரையும் விமர்சித்து வந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கடந்த 2018ஆம் ஆண்டு இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரில் கொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
பிப்ரவரி 2021-ஆம் ஆண்டு கஷோகியின் கொலைக்கு சல்மான் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்தது.
இந்தநிலையில், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதிலிருந்து விலக்கு அளித்திருப்பதை,
2005-ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விதிக்கப்பட்ட அமெரிக்கா விசா தடையுடன் ஒப்பிட்டு அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பேசியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
செல்வம்
உலக கோப்பை கால்பந்து: அணிகள், பரிசுத்தொகை, கட்டுப்பாடு முழு விவரம்!