மாற்றுத்திறனாளி என போலிச்சான்றிதழ் கொடுத்து ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக பூஜா கெட்கரின் தேர்ச்சியை ரத்து செய்து மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இன்று (ஜூலை 31) உத்தரவிட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா ஐஏஎஸ் கேடரைச் சேர்ந்தவர் பூஜா கெட்கர். இவர் அகில இந்திய அளவில் 841-வது இடத்தைப் பிடித்திருந்தார். மாற்றுத்திறனாளி மற்றும் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர் என போலிச்சான்றிதழ் கொடுத்து பூஜா கெட்கர் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி ஆனதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக யுபிஎஸ்சி ஆணையம் விரிவான விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் பூஜா கெட்கர் போலி ஆவணங்கள் மூலம் தேர்ச்சி பெற்றது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பூஜா கெட்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், CSE-2022 விதிகளுக்கு முரணாக அவர் செயல்பட்டதை கண்டறிந்து அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்படுகிறார். அவரது ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் அவர் தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படுகிறது.
மேலும், இதுதொடர்பாக ஜூலை 18-ஆம் தேதி பூஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவருக்கு ஜூலை 30 வரை பதிலளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், போலி ஆவணங்கள் மூலம் ஐஏஎஸ் தேர்வில் மோசடி செய்ததாக பூஜா மீது நான்கு பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வயநாடு நிலச்சரிவு: தமிழக காங்கிரஸ் ரூ.1 கோடி நிவாரண நிதி!
ஆளுநர் பதவி நீட்டிப்பா? நான் ஜனாதிபதி இல்லை… ஸ்டாலின் பதில்!