உத்தரப் பிரதேசத்தில் பள்ளி முதல்வர் ஒருவர் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு பாதிக்கப்பட்ட மாணவிகள் ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், காஸியாபாத்தில் பள்ளி முதல்வராக இருப்பவர் முனைவர் ராஜீவ் பாண்டே.
இவர் அந்தப் பள்ளியில் பயிலும் 12 முதல் 15 வயது வரை இருக்கும் மாணவிகளை ஏதாவது ஒரு காரணம் கூறி அவருடைய அறைக்கு வரவழைத்து, பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் பயந்த மாணவிகள் ஒருகட்டத்தில் பெற்றோரிடம் தெரிவித்திருக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, மாணவிகளின் பெற்றோரும் பள்ளிக்கு வந்து பள்ளி முதல்வரிடம் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இதனால், ராஜீவ் பாண்டேவுக்கும், பெற்றோர் தரப்புக்கும் மத்தியில் மோதல் ஏற்பட்டிருக்கிறது.
மேலும், பெற்றோர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். அதேநேரம் ராஜீவ் பாண்டேவும் காவல் நிலையத்தில், மாணவிகளின் பெற்றோர் அத்துமீறி பள்ளிக்குள் நுழைந்து தாக்கியதாகப் புகார் கொடுத்திருக்கிறார்.
இரு தரப்பு மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு ரத்தத்தால் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
அதில், “எங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்பதால், அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
எங்களை மிரட்டி பல மணி நேரம் காவல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தார்கள். எனவே, எங்கள் ஆசிரியரால் துன்புறுத்தப்பட்ட நாங்கள் அனைவரும் இந்தப் பிரச்சினையை உங்களுடன் நேரில் விவாதிக்க விரும்புகிறோம்.
நாங்கள் அனைவரும் உங்கள் மகள்கள்தான். உங்களைச் சந்தித்து நியாயம் கேட்க எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும் அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இது குறித்து காஸியாபாத் காவல் துறையின் மூத்த அதிகாரி சலோனி அகர்வால்,
“குற்றம்சாட்டப்பட்ட ராஜீவ் பாண்டேவை கைது செய்திருக்கிறோம். இந்த வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ராஜ்
நாங்குநேரி சின்னதுரை குடும்பத்தை ஒதுக்கி வைக்க முடிவு: அதிர்ச்சி ரிப்போர்ட்!
தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி காவிரி நீர் திறக்க உத்தரவு!