தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்று Alt News செய்தி நிறுவனம் Fact Check செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் இந்தி பேசும் வடமாநில தொழிலாளர் ஒருவரை தமிழகத்தைச் சேர்ந்தவர் தாக்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டது. அதில், புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்களால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதாக அந்த நபர் குற்றம் சாட்டியிருந்தார்.
வீடியோ வைரலான சில நாட்களுக்குப் பிறகு, ரயில்வே போலீசார் வட மாநில தொழிலாளரை தாக்கிய விழுப்புரத்தைச் சேர்ந்த மகிமைதாஸ் (38) என்பவரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில், தமிழகத்தில் இந்தி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக சமூக ஊடகங்களில் ஒரு சில வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன.
இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்று Alt News செய்தி நிறுவனம் Fact Check செய்து செய்தி வெளியிட்டுள்ளது.
ட்விட்டரில் ப்ளூ டிக் பெற்ற முகமது தன்வீர் என்ற பயனர், “தமிழகத்தில் இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுகிறார்கள். பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட் அரசுகள் மௌனம் காத்து வருகின்றன. இந்தி பேசும் மக்கள் மீதான இத்தகைய அடக்குமுறையை இந்தியாவில் இதற்கு முன் பார்த்ததில்லை. வாள்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.” என்று தெரிவித்திருந்தார்.
அவர் பகிர்ந்த வீடியோவில் முகமூடி அணிந்த மூன்று நபர்கள் ஒருவரை அரிவாள் மற்றும் கத்தியால் தாக்குகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இது கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி 24 வயதான கோகுல் என்ற இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்த வீடியோவாகும். இந்த வழக்கில் காவல்துறையினர் 5 பேரை கைது செய்தனர். எனவே, வைரலான வீடியோவுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
மற்றொரு வீடியோவில், சாலையில் ரத்த வெள்ளத்தில் வெட்டுக்காயங்களுடன் ஒரு நபர் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறார். அவரை சுற்றி மக்கள் கூட்டம் மற்றும் இரண்டு காவல்துறையினர் உள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த காலங்களில் திருப்பூர் மற்றும் கோவையில் நடைபெற்றது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடையது அல்ல என்று டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்.
மற்றொரு வீடியோவில் நீல நிற சட்டை அணிந்தவர் ஒரு நபரை கத்தியால் குத்துகிறார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரைத் தடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அவர் தொடர்ந்து அந்த நபரை கத்தியால் குத்துகிறார். பின்னர் கல்லை கொண்டு பாதிக்கப்பட்டவரின் முகத்தை நசுக்க முயற்சிக்கிறார்.
இந்த வீடியோ ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வழக்கறிஞர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவமாகும்.
எம்.டி சிக்காந்தர் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் மூன்று நபர்கள் சேர்ந்து ஒருவரை தாக்குகிறார்கள். ஒருவர் பாதிக்கப்பட்டவரைப் பிடித்துள்ளார். மற்ற இருவரும் அவரை தடி மற்றும் அரிவாளால் தாக்குகிறார்கள்.
அதில் அவர், “தமிழகத்தில் இந்தி பேசும் மக்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுகிறதா? நாட்டில் சட்டங்கள் முடிந்துவிட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது ஹைதராபாத் ஜியாகுடா புறவழிச்சாலை புரனாபூல் அருகே மதுபோதையில் இருந்த ஆகாஷ், தில்லு மற்றும் சோனு ஆகிய மூன்று நபர்கள் ஜங்கம் சாய்நாத் என்பவரை தாக்கிய வீடியோவாகும். இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்த அந்த மூவரையும் கைது செய்தனர்.
யுவ்ராஜ் சிங் ராஜ்புத் என்பவர் தனது ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில், நான்கு பேர் சேர்ந்து ஒருவரை கோடரி மற்றும் அரிவாளால் சரமாரியாக தாக்குகிறார்கள். பாதிக்கப்பட்டவர் துப்பாக்கி வைத்துள்ளார். ஆனால் சண்டையின் போது தாக்குபவர்கள் அவரிடமிருந்து துப்பாக்கியை பறித்தனர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் பீகாரி சகோதரர் ஒருவர் ஈவு இரக்கமின்றி அடித்துக் கொல்லப்பட்டும், நிதிஷ் அரசு அமைதியாக உள்ளது. இந்த அரசு அதிகாரத்தில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவானது கடந்த 2021-ஆம் ஆண்டு அன்று கர்நாடக மாநிலம் சவனூரில் உள்ள கரடகி கிராஸில் ‘டைகர்’ என்கிற அன்வர் ஷேக் கொல்லப்பட்ட வீடியோவாகும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஹாவேரி மாவட்டம் சவனூர் நகரைச் சேர்ந்த இம்ரான் சவுத்ரி (28), தன்வீர் சவுத்ரி (24), அபிர் சவுத்ரி (22), ரெஹான் சவுத்ரி (20) ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்தநிலையில், தமிழ்நாட்டில் வட மாநில நபர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் உம்ரவ் மீது தூத்துக்குடி போலீசார் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செல்வம்
ஐ.நா.வை அடுத்து அமெரிக்கா… கைலாசாவின் அடுத்த சறுக்கல்?
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் லட்டு!