மனைவியின் விருப்பம் இல்லாமல் முறையற்ற பாலுறவு கொள்வது குற்றமல்ல என சத்தீஸ்கர் நீதிமன்றம் தீர்ப்பளித்து கணவரை விடுதலை செய்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பஷ்தார் மாவட்டம் ஜக்லாபூரை சேர்ந்த கணவர் மீது மனைவியின் அனுமதியின்றி முறையற்ற பாலுறவு கொண்டதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதனால், வலியால் அவதிப்பட்ட மனைவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , அதே நாளில் இறந்தும் போனார். போலீசார் கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. மரணத்துக்கு முன், மனைவி கூறிய தகவல்களை கொண்டு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருந்தது. கணவர் மீது இந்திய தண்டனை சட்டம் 304 (கொலை செய்யும் நோக்கம் இல்லாதது )376 (பாலியல் பலாத்காரம் ) 377 ( இயற்கைக்கு மாறான உடலுறவு )பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்கு ஜக்லாபூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் கணவர் மேல்முறையீடு செய்தார். வழக்கை சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நரேந்திரகுமார் வியாஸ் விசாரித்து வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி அனைத்து விசாரணைகளும் முடிந்து விட்ட நிலையில், பிப்ரவரி 10 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மனைவியின் வயது 15-க்கு மேலாக இருந்தால் கணவர் மனைவியுடன் கொள்ளும் பாலுறவு அல்லது பாலியல் செயலை பாலியல் பலாத்காரமாக கருத முடியாது.
இதன் காரணமாக இயற்கைக்கு மாறாக உறவு கொள்ள மனைவி எதிர்ப்பு தெரிவித்தது இந்த வழக்கில் முக்கியத்துவத்தை இழக்கிறது. இதனால், இந்திய தண்டனை சட்டம் 376 (பாலியல் பலாத்காரம்) இந்திய தண்டனை சட்டம் 377( இயற்கைக்கு மாறான உடலுறவு, விலங்குகளுடன் உடலுறவு) போன்ற பிரிவுகள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக பயன்படுத்த தேவையில்லை என்றே இந்த நீதிமன்றம் கருதுகிறது. குற்றம்சாட்டப்பட்ட நபரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.