ச.மோகன்
வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்து சமகால சமூக, அரசியல், பொருளாதார செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த நோக்கு நிலையில் ஐ.நா-வின் ‘உலகளாவிய காலமுறை மீளாய்வு’ உருவானதன் பின்புலத்தைக் காண வேண்டியுள்ளது.
மனித குலத்தையே பேரழிவுக்குள்ளாக்கிய இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து, பன்னாட்டு அமைதியையும், பாதுகாப்பையும், நல்லுறவையும் உறுதிப்படுத்தும் தொலைநோக்குப் பார்வையில் ‘ஐக்கிய நாடுகள் அவை’ 1945 அக்டோபர் 24 அன்று உருவாக்கப்பட்டது.
மனித உரிமைகளை ஓர் உலகப் பண்பாடாக வளர்த்தெடுத்துப் பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்ட ஐ.நா பல வரலாற்றுப் பணிகளைச் செவ்வனே செய்து முடித்துள்ளது. எடுத்துக்காட்டாக 1948 டிசம்பர் 10இல் வெளியான அகில உலக மனித உரிமைகள் பிரகடனம், இனப்பாகுபாடு ஒழிப்பு பற்றிய அகில உலக உடன்படிக்கை-1969,
ஐ.நா-வின் பெண்கள் மீதான அனைத்து வகைப் பாகுபாட்டுக்கெதிரான உடன்படிக்கை-1979, சித்திரவதைக்கு எதிரான ஐ.நா-வின் உடன்படிக்கை-1984, ஐ.நா-வின் குழந்தைகள் உரிமைக்கான உடன்படிக்கை- 1989, மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்-1993, மனித உரிமைக் காப்பாளருக்கான பிரகடனம் –1995 போன்றவற்றின் வரிசையில் உருவானதுதான் ஐ.நா-வின் ‘உலகளாவிய காலமுறை மீளாய்வு’ ஆகும்.
ஏன் உருவானது?
அறிவில் சிறந்தோர் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பி, குற்றம் குறைகளை பொது வெளியில் விமர்சிப்பது கண்டு கவலையுற்ற நாடுகள் இதற்குத் தீர்வு காண கலந்தாலோசித்தன.
நம்மை “நாமே மீளாய்வு செய்வோம்” என்று முடிவெடுத்தன. இதனடிப்படையில் ஐ.நா-வின் ‘உலகளாவிய காலமுறை மீளாய்வு’ 2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. உலகில் உள்ள 195 நாடுகளில் 193 நாடுகள் ஐ.நா அவையில் உறுப்பு நாடுகளாக உள்ளன.
மீதி இரண்டு நாடுகள் உள்ளன, 1. வாட்டிகன் நகரம், 2. பாலஸ்தீனம். இவை இரண்டும் நாடுகளாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் ஐ.நா-வின் பார்வையாளர்களாக உள்ளன.
‘உலகளாவிய காலமுறை மீளாய்வு’ என்றால் என்ன?
உலக நாடுகளில் காணப்பெறும் மனித உரிமை நிலை பற்றி ஐ.நா அவையில் விவாதிக்கப்பெறும் நிகழ்வே ‘உலகளாவிய காலமுறை மீளாய்வு’ ஆகும்.
இந்த நிகழ்வு நான்கரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் நடைபெறும். ஒரு ஆண்டுக்கு மூன்று அமர்வுகள் நடைபெறும். ஓர் அமர்வில் பதினான்கு நாடுகள் இடம் பெறும். இந்த மீளாய்வு ஐ.நா அவையினுடைய மனித உரிமைப் பேரவையின் (UN Human Rights Council) செயற்பாடுகளில் ஒன்றாகும்.
இதை ‘ஐ.நா-வின் உலகளாவிய காலமுறை மீளாய்வு பணிக்குழு’ வழிநடத்துகிறது. இந்தப் பணிக்குழு ஐ.நா-வின் 43 உறுப்பு நாடுகளை உள்ளடக்கியதாகும். அனைத்து உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா-வின் மனித உரிமை உடன்படிக்கைகள் அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளின் மீதான மீளாய்வு முறையாக நடைபெறுகிறது.
இதன் மூலம் ஒரு நாட்டின் மனித உரிமைத் தரம் மதிப்பீடு செய்யப்படுகிறது. தரம் குறைந்த நாடு மீது உலக நாடுகள் வர்த்தக உறவை முறித்துக் கொள்ளும்.
ஒரு நாட்டின் மனித உரிமை நிலை குறித்த விவாதத்தில், தேசிய மனித உரிமை நிறுவனங்களுக்கு இணையான பங்கேற்பாளராக குடிமைச் சமூகத்தையும் உள்ளடக்கியிருப்பது இம்மீளாய்வின் தனித்துவம் ஆகும்.
எதன் அடிப்படையில் மீளாய்வு?
ஒரு நாடு அளிக்கும் அறிக்கையின் மீது கீழ்க்கண்ட ஆவணங்களின் அடிப்படையில் மீளாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
1. ஒரு நாட்டின் மனித உரிமை நிலை குறித்து அந்நாட்டு அரசால் தயாரிக்கப்பட்ட தேசிய அறிக்கை.
2. மனித உரிமை பற்றிய அறிவுத்திறன் கொண்ட வல்லுநர் குழுக்கள், ஐ.நா-வின் சிறப்பு நடைமுறைகள், ஐ.நா மனித உரிமைகள் குறித்த உடன்படிக்கைகளைக் கண்காணிக்கும் ஐ.நா-வின் பிற நிறுவனங்கள் ஆகியவற்றின் அறிக்கையில் இடம்பெறும் தகவல்கள்.
3. தேசிய மனித உரிமை நிறுவனங்களிடமிருந்தும், குடிமைச் சமூக அமைப்புகளிடமிருந்தும் பெறப்பட்ட தகவல்கள்.
இந்தியா மீதான மீளாய்வு
இந்தியா மீதான முதலாவது ‘உலகளாவிய காலமுறை மீளாய்வு’ (UPR-I) 2008ஆம் ஆண்டும், இரண்டாவது மீளாய்வு (UPR-II) 2012ஆம் ஆண்டும், மூன்றாவது மீளாய்வு 2017ஆம் ஆண்டும் நடைபெற்றன.
இந்தியா மீதான நான்காவது மீளாய்வு 41ஆவது அமர்வாக இன்று (2022 நவம்பர் 10) அன்று ஜெனீவா நகரில் இந்திய நேரப்படி இரவு 7.00 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறுகிறது.
ஐ.நா-வின் இணைய வழி தொலைக்காட்சியில் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பாகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அரசின் பிரதிநிதிகள் குழுவை சொலிசிட்டர் ஜெனரல் துசார் மேத்தா வழி நடத்துகிறார்.
இந்திய பிரதிநிதிகள் பேசுவதற்கு எழுபது நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய பிரதிநிதிகள் பேசுவதைக் கவனித்துக் கருத்து சொல்ல அல்லது பரிந்துரை வழங்க 132 நாடுகள் விருப்பம் தெரிவித்து ஐ.நா-வில் பதிவு செய்துள்ளன. இந்த நாடுகளுக்குத் தலா 55 நொடிகள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன.
குடிமைச் சமூகங்களின் பங்களிப்பு
சுதந்திரமாகச் சங்கம் அமைப்பதற்கான உரிமை, அமைதியாகக் கூடுவதற்கான உரிமை, கருத்துரிமை, மனித உரிமைக் காப்பாளர்களின் நிலை மற்றும் குடிமைச் சமூகத்தின் இன்றைய நிலை இவை குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பதில் போன்ற பல்வேறு தலைப்புகளில் குடிமைச் சமூகங்கள் அறிக்கை அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாமும் காணலாம்
ஐ.நா அவையின் அரங்கில் நான்கு சுவருக்குள் நடக்கும் நிகழ்வை நாமும் காணலாம். ஐ.நா-வின் இணைய வழி தொலைக்காட்சி இணைப்பை கூகுள் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஐ.நா மன்றத்தில் நடப்பதை மக்கள் மன்றம் கண்காணிக்கும்போது உண்மை நின்றிடும்! மனித உரிமைகள் வென்றிடும்!
சென்னையில் மழை: அலுவலகம், பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோரின் கவனத்திற்கு!
கோவை சம்பவம் : காலையிலேயே களமிறங்கிய என்.ஐ.ஏ அதிகாரிகள்!