மத்திய பட்ஜெட் 2025: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

Published On:

| By Selvam

2025 union budget sector wise

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று 2025-2026-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்… union budget sector wise

வேளாண்துறை

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.31 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2025-26 ஆம் ஆண்டு ரூ.1.27 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் துறையில்  திறன் மேம்பாடு, முதலீடு, தொழில்நுட்பம், கிராமப்புற பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பை  அதிகரிக்கும் வகையில் மாநிலங்களுடன் இணைந்து பல்துறை விரிவான வேளாண் திட்டம்  தொடங்கப்படும்.

முதல் கட்டமாக 100 மாவட்டங்களில் வேளாண் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும்.

துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் மசூர் பருப்பு ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பருப்பு உற்பத்திக்கான தன்னிறைவு இயக்கத்தை மத்திய அரசு 6 ஆண்டுகளுக்கு செயல்படுத்த உள்ளது. 

தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக்கான கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் இந்த பருப்பு வகைகள் கொள்முதல் விவசாயிகளிடமிருந்து அடுத்த 4 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்யப்படும்.

பாதுகாப்புத்துறை

2025-26 நிதியாண்டுக்கு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.6.81 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு கடந்த நிதியாண்டை விட 9.53% அதிகமாகும்.

இதில், ரூ.1,80,000 கோடி பாதுகாப்பு சேவைகளுக்கான மூலதனச் செலவினத்திற்காக செலவிடப்படும்.

ஆயுதப் படைகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.3.11 லட்சம் கோடியாக இருக்கும். பாதுகாப்புத்துறையினர் ஓய்வூதியத்திற்கு ரூ.1,60,795 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.28,682 கோடி பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆயுதப் படைகளை நவீனமயமாக்க பயன்படுத்தப்படும். union budget sector wise

கப்பல், விமான போக்குவரத்துத் துறை

2025-26 ஆம் ஆண்டிற்கான துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்திற்கான ரூ. 3,471 பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடல்சார் தொழில் துறைக்கு ரூ.25,000 கோடி நிதியுடன் கடல்சார் மேம்பாட்டு நிதியம் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.  இந்த நிதியில் 49 சதவீதம் வரை அரசு பங்களிப்பாக இருக்கும் என்றும், மீதமுள்ள தொகை துறைமுகங்கள், தனியார் துறை ஆகியவற்றிடமிருந்து திரட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, பிராந்திய இணைப்புத் திட்டமான உடான் திட்டத்தின் மூலம் இதுவரை 1.5 கோடி நடுத்தர வர்க்க மக்கள் பயன் அடைந்துள்ளனர்.

இந்தத் திட்டம் 88 விமான நிலையங்களை இணைத்து 619 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, 120 புதிய இடங்களுக்கு இணைப்பை விரிவுபடுத்தி அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி பயணிகள் பயன் அடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

கல்வித்துறை

2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்வி அமைச்சகத்திற்கு ரூ.1.28 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறைக்கு ரூ.50,067 கோடியும், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.78,572 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆர்வத்தையும் புதுமை உணர்வையும் வளர்ப்பதற்கும், மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கும் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் ஐம்பதாயிரம் அடல் சிந்தனை ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்கப்படும்.  

உயர்கல்வியைப் பொறுத்தவரை, 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், கடந்த 10 ஆண்டுகளில் 23 ஐஐடி நிறுவனங்களில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்திலிருந்து 1.35 லட்சமாக அதிகரிக்கப்படும்.

மாணவர்கள் தங்கள் பாடங்களை நன்கு புரிந்துகொள்ள உதவும் நோக்கில், பள்ளி, உயர்கல்விக்கு டிஜிட்டல் வடிவ இந்திய மொழி புத்தகங்களை வழங்குவதற்காக இந்திய மொழி நூல்கள் (பாரதிய பாஷா புஸ்தக்) திட்டம் செயல்படுத்தப்படும்.

திறன் மேம்பாட்டுக்கான ஐந்து தேசிய உயர் திறன் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.

ரூ.500 கோடி மொத்த செலவில் செயற்கை நுண்ணறிவுக் கல்விக்காக சிறப்பு மையம் அமைக்கப்படும்.

ரயில்வே துறை

இந்திய ரயில்வேக்கு கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட அதே ரூ. 2,52,000 கோடியை ஒதுக்கியதுடன், அதன் செலவுகளைச் சமாளிக்கவும் அதை நவீனமயமாக்கவும் ரூ. 10,000 கோடியை கூடுதல் பட்ஜெட் வளங்களிலிருந்து அரசு ஒதுக்கியது.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரயில்வேயின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நான்கு லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பில் கவனம் செலுத்தி, பல்வேறு திட்டங்கள் மூலம் இந்திய ரயில்வேயின் பாதுகாப்பை அதிகரிக்க இந்த ஆண்டு ஒரு லட்சத்து பதினாறாயிரம் கோடி ரூபாய் செலவினங்களுக்காக பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 1.6 பில்லியன் டன் சரக்குகளை ஏற்றிச் செல்லும் இரண்டாவது பெரிய சரக்கு ரயில்வேயாக இந்திய ரயில்வே மாறும். அதிவேக ரயில்களில், 2047-ம் ஆண்டுக்குள் மணிக்கு 250 கிலோ மீட்டராக வேகம் அதிகரிக்கப்படும். 7,000 கிமீ அதிவேக ரயில் கட்டமைப்பை இந்தியா கொண்டிருக்க இலக்கு வைத்துள்ளது. union budget sector wise

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share