இலங்கை விவகாரம் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில், இன்று (அக்டோபர் 6) வரைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. அந்தப் போரிலும் போருக்குப் பிறகும் நிகழ்ந்த,
போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்.
அத்தகைய செயல்களுக்கு நீதி பெற்று தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் இன்று (அக்டோபர் 6) ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்தை அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் கொண்டுவந்தன.
கடந்த ஆண்டு (2021) கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் முக்கிய அம்சங்களே இந்த வரைவிலும் இடம்பெற்றிருந்தன.

இத்துடன் கூடுதலாக, ‘எதிர்காலத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அல்லது சர்வதேச மனித உரிமை சட்டத்தின் கடுமையான மீறல்கள் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதற்கான செயல்முறை உத்திகள் வகுக்கப்பட வேண்டும்.
மேலும், போரில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக ஆதரவாக வாதிடவும், உறுப்பு நாடுகளில் தகுதிவாய்ந்த அதிகார வரம்பின்கீழ் நீதித்துறை மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்படவும் ஐநா மனித உரிமைகள் தூதர் அலுவலகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
நல்லிணக்கம், பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் மனித உரிமைகளின் தாக்கம் உள்ளிட்டவற்றை கண்காணித்து ஐநா மனித உரிமைகள் தூதர் அலுவலகம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என அந்த தீர்மானத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, உக்ரைன், பாராகுவே, போலந்து, கத்தார், மெக்சிகோ, பின்லாந்து உள்ளிட்ட 20 நாடுகள் வாக்களித்தன.
ஆனால், எதிர்பார்த்தபடியே, இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது. இந்தியாவுடன், கத்தார், சோமாலியா, சூடான், இந்தோனேஷியா, ஜப்பான், கஜகஸ்தான், லிபியா, மலேசியா, நமீபியா, பிரேசில் உள்ளிட்ட 20 நாடுகள் புறக்கணித்திருந்தன.
தீர்மானத்திற்கு எதிராக சீனா, பாகிஸ்தான், கியூபா, உஸ்பெகிஸ்தான், பொலிவியா உள்ளிட்ட 7 நாடுகள் வாக்களித்துள்ளன. ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன.
கடந்த 2021ஆம் மார்ச் மாதம் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்போதும் இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்திருந்தது.
ஜெ.பிரகாஷ்
தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!
கார்கேவும் நானும் எதிரிகள் அல்ல: சசிதரூர்