பிகார் மாநிலத்தில் கங்கையின் குறுக்கே புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று உத்தரவிட்டுள்ளார்.
பிகார் மாநிலம் ககாரியாவில் 1,717 கோடி ரூபாய் செலவில் அகுவானி சுல்தங்கஞ்ச் கங்கையில் கட்டப்பட்டு வந்த பாலம் இன்று திடீரென இடிந்து விழுந்தது.
இதை அந்த பகுதியில் உள்ள மக்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், ”கட்டுமான பணிகளுக்கு கமிஷன் வாங்கும் போக்கு அதிகமாகவே இருப்பதால் தான் இது போன்ற விபத்துகள் ஏற்படுகிறது” என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும், ”இங்கே மாநில அரசின் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதற்கான எடுத்துக்காட்டு தான் இது.. பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து குறித்து ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பிகார் முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக 2022 டிசம்பரில், பிகாரின் பெகுசராய் பகுதியில் புர்ஹி கந்தக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி இதேபோல இடிந்து விழுந்தது.
அப்போது பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, பாலத்தின் 2 மற்றும் 3 தூண்கள் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
படமாகிறது ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை!