சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை அணுக முடியவில்லை என்று அவரது சட்ட குழு கூறுகிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) என்ற கட்சியை தொடங்கி 2018 ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் போட்டியிட்டு பிரதமர் ஆனார். பின்னர் அவரது கூட்டணி கட்சிகள் விலகியதால் பிரதமர் பதவியை 2022ல் இழந்தார்.
இந்நிலையில் தனது மனைவி பும்ரா பீவிக்கு சொந்தமான காதிர் அறக்கட்டளையின் 5000 கோடி ரூபாய் ஊழல் குறித்த வழக்கில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே அவர் மீது கருவூல பரிசு பொருட்களை முறைகேடாக விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
2019 ஆம் ஆண்டு இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது சவுதி அரேபியாவுக்கு அரசு முறை பயணமாக சென்று வந்தார்.
அப்போது சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் வைரங்களாலான 16 கோடி ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரத்தை பரிசாக கொடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் சட்ட விதிகள் படி இது போன்று பிரதமர்கள் வெளிநாட்டு பயணங்களின் போது பரிசு பெற்றால் அதனை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்.
ஆனால் இந்த கைக்கடிகாரத்தை இம்ரான் கான் கருவூலத்தில் ஒப்படைக்காமல் தனது மனைவியிடம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இது தவிர வெளிநாட்டு பயணங்களின் போது கிடைத்த விலை உயர்ந்த பேனா உள்ளிட்ட பரிசு பொருட்களையும் அவர் முறைகேடாக விற்றதாகவும் கூறப்படுகிறது.
இதுதவிர தோஷாக்கானா எனப்படும் அரசு கருவூலத்திலிருந்து குறைந்த தொகைக்கு பரிசு பொருட்களை பெற்று அதனை அதிக விலைக்கு விற்றதாகவும், அதன்படி 2.15 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களை இரு மடங்கு விலை வைத்து 5.8 கோடி ரூபாய்க்கு விற்றதாகவும் இம்ரான் கான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நேற்று இஸ்லாமாபாத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹுமாயுன் திலாவர் தீர்ப்பு வழங்கினார்.
இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை இம்ரான் கான் செலுத்தாவிட்டால் கூடுதலாக ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவில் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நேற்று இரவே நாகூரில் உள்ள இல்லத்தில் வைத்து இம்ரான் கானை போலீசார் கைது செய்தனர். இஸ்லாமாபாத் பகுதியில் இருக்கும் அட்டோக் சிறையில் இம்ரான் கானை நேற்று இரவு அடைத்தனர்.
இந்நிலையில், அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அவரை சட்டக் குழுவால் அணுக முடியவில்லை என்று இம்ரான் கானின் சட்ட விவகார செய்தி தொடர்பாளர் நயீம் ஹைதர் பன்ஜோதா தெரிவித்துள்ளார்.
முன் நிபந்தனைப்படி சிறை கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் உள்துறை செயலாளர் ஆகியோரிடம் முறையீடு செய்த பின்னும் இம்ரான் கானுக்கு உணவு வழங்குவது அல்லது சட்ட ஆவணங்களில் கையெழுத்து வாங்குவது ஆகிய காரணங்களுக்காக அணுக முடியவில்லை. இது கைது போல் தெரியவில்லை கடத்தல் போல் தெரிகிறது என்று குற்றம் சாட்டி பிடிஐ கட்சி வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளது.
பிரியா
”அதிமுக வாக்கு சதவிகிதம் இதுதான், ஈபிஎஸை வீழ்த்தாமல் ஓயமாட்டேன்” : டிடிவி சூளுரை!
தமிழில் பேசிய ஆளுநர்: வியந்து கேட்ட முதல்வர்!