ஐரோப்பாவின் பல பகுதிகளில் வெப்பம் சுட்டெரிக்கிறது. இந்த வெப்ப அலைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ள ஐ.நா அதற்கான காரணத்தையும் தீர்வையும் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள்.
வெப்ப அலை தாங்க முடியாமல் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. வெப்ப அலையால் பலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் தெற்கு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதில் கிரீஸ் நாட்டின் முக்கிய பகுதியும் அடங்கும்.
இந்த நிலையில் இத்தாலியின் தலைநகரான ரோம் நகரில் வாட்டி வதைத்து வரும் வெயில் காரணமாக நீரிழப்பு ஏற்பட்டு ஒரு நிமிடத்துக்கு ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னனர். இது வெப்பம் தொடர்பான உயிரிழப்பின் அபாயத்தை உயர்த்துகிறது என்று உலக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இத்தாலியில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவான நிலையில் மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. வெப்பம் காரணமாக சீக்கிரமாக வீடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பா மற்றும் ஆசியா நாடுகளிலும் வெப்ப அலைகள் அதிகரித்து வருகிறது. புவி வெப்பமடைதலின் விளைவுகளை நினைவூட்டும் வகையில், வட அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா மற்றும் ஆசியா வரை சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள ஐ.நா-வின் உலக வானிலை அமைப்பின் தீவிர வெப்ப ஆலோசகர் ஜான்நேர்ன்,
“வெப்ப அலை நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும். மேலும் கடுமையான வெப்ப அலைகளுக்கு உலகம் தயாராக வேண்டும். வெப்ப அலைகள் மிகவும் ஆபத்தான இயற்கை ஆபத்துகளில் ஒன்றாகும். ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் வெப்பம் தொடர்பான காரணங்களால் இறக்கின்றனர்.
வளர்ந்து வரும் நகர மயமாக்கல் அதிக வெப்ப உச்சநிலை, வயதான மக்கள் தொகை ஆகியவற்றுக்கு மத்தியில் சுகாதார ஆபத்து வேகமாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட எல் நினோ விளைவு இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் வெப்பமயமாதல், காலநிலை முறை, அதிக வெப்ப நிகழ்வுகள் மற்றும் வெப்ப தீவிரத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்ப அலைகளைத் தடுக்க கார்பன் எரிபொருட்களை நிறுத்த வேண்டும். அனைத்தையும் மின்மயமாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும், 1980-களில் இருந்து வடக்கு அரைக்கோளத்தில் ஒரே நேரத்தில் வெப்ப அலைகளின் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி உள்ளார். தொடர்ந்து, “இந்த வெப்ப அதிகரிப்பு குறைவதற்கான அறிகுறி தெரியவில்லை. வெப்ப அலைகளினால் மனித ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரங்களில் ஏற்படும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்” என்றும் எச்சரித்துள்ளார்.
இப்படிப்பட்ட வெப்ப அலைக்கு ஐரோப்பியாவில் கடந்த 2003-ம் ஆண்டு 70,000 பேரும், கடந்த (2022) ஆண்டு 62,000 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்