முக்கிய நகரில் இருந்து படைகளை வாபஸ் பெறும் உக்ரைன்: என்ன காரணம்?

Published On:

| By Kavi

Ukrainian troops withdraw from Avdiivka

Ukrainian troops withdraw from Avdiivka

கிழக்கு உக்ரைனின்  முக்கிய நகரான அவிடிவ்காவை  ரஷ்யாவிடம் இழந்த உக்ரைன், அந்த நகரில் இருந்து படைகளை வெளியேற்றுவதாக அந்நாட்டு ராணுவ தளபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போரை துவங்கியது. சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த போரில்,

உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தொடர்ந்து உதவி செய்ததால் போர் சுமார் இரண்டு ஆண்டுகளாக நீண்டு கொண்டே வருகிறது.

வருகிற 24-ம் தேதி இந்த போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், ரஷ்யா நடத்தி வரும் போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது.

தற்போது வரை உக்ரைனின் முக்கிய நகரங்களை நெருங்க முடியாதவாறு உக்ரைன் படைகள் ரஷ்யப் படைகளை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் அவ்வப்போது சில நகரங்களை இழக்க வேண்டிய நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கிழக்கு உக்ரைனில் அவிடிவ்கா நகரை கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக ரஷ்யப்படைகள் முற்றுகையிட்டு இருந்தன.

இந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து அந்நகரில் போர் நடைபெற்று வந்த போதும், ரஷ்யப்படைகளால் முழுமையாக உக்ரைன் படைகளை வெல்ல முடியவில்லை.

ஆனால், கடந்த சில நாட்களாக நிலைமை அங்கு மோசம் அடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. குறிப்பாக போதுமான ஆயுதங்கள், உணவு உள்ளிட்டவை இன்றி உக்ரைன் படைகள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தன.

இந்த நிலையில் மேலும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக அந்நகரத்திலிருந்து உக்ரைன் படைகளை வாபஸ் பெறுவதாக அந்நாட்டு ராணுவ தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி அறிவித்துள்ளார்.

கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து வந்ததாகவும், தற்போது நாட்டை பாதுகாக்கும் வீரர்களின் நலனுக்காக அவிடிவ்கா நகரில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ரஷ்யாவில் வருகிற மார்ச் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வெற்றி ரஷ்யாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”பிரமாண்ட பட்ஜெட்” மீண்டும் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடிக்கும் சூர்யா?

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்!

சிவகார்த்திகேயனால் கைவிடப்பட்ட படம்?

GOAT: தளபதி விஜய்க்கு ‘வில்லன்’ இவர்தான்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share