கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதி தொடரும்: ஜெலன்ஸ்கி

Published On:

| By christopher

Ukraine to continue grain deal without Russia

‘ரஷ்யாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியை தொடர முடியும்’  என்று  உக்ரைன் அதிபர்   ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது. உலகின் பல நாடுகளுக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசியமான உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில், இந்த போர் காரணமாக தானிய ஏற்றுமதி நின்று மிகப்பெரிய உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் ஏற்பட்டது.

இதைத் தவிர்க்க கடந்த வருடம் ஜூலை மாதம் ஐநா மற்றும் துருக்கி தலையிட்டு ரஷ்யாவுடன் ஓர் உடன்படிக்கை செய்தது.

கருங்கடல் தானிய ஒப்பந்தம் எனும் அந்த உடன்படிக்கையின்படி உக்ரைனின் மூன்று துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி தொடர்வதற்கு ரஷ்யா சம்மதித்தது.

இந்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் இதை மீண்டும் புதுப்பிக்க ரஷ்யா மறுத்து, இதிலிருந்து விலகிக் கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதனால், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து பல்லாயிரக்கணக்கான டன் தானிய ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் உருவாகி அதன் மூலம் பெரும் உணவு பஞ்சம் ஏற்படலாம் என அச்சம் உருவானது..

இந்த நிலையில் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக பேசியுள்ள அவர்,

“உலகின் 40 கோடி மக்கள் இந்த உணவு பொருட்களை நம்பியிருக்கின்றனர்.  உக்ரைன் உணவு விநியோகம் செய்வதை தடுக்க ரஷ்யாவுக்கு எந்த உரிமையும் இல்லை.

எகிப்து, சூடான், ஏமன், வங்காளதேசம், துருக்கி, இந்தியா, இந்தோனேசியா என அனைத்து நாடுகளையும் பாதிக்கும் ரஷ்யாவின் இந்த மிரட்டலுக்கு உலகம் அடிபணியக் கூடாது.

ரஷ்யாவின் எதேச்சதிகார முடிவை மீறி தானிய ஏற்றுமதி தொடர உலக நாடுகள் அனைத்தையும் செய்ய வேண்டும். ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தங்களுக்குத் தடையற்ற உணவு பொருள் விநியோகம் கோர உரிமையுண்டு. ரஷ்யாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியைத் தொடர முடியும். எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை” என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

IND vs BAN: வங்காளதேசத்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel